இந்தியாவில் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் இழுத்தடித்து நானே ராஜா
என்பதுபோல நடந்து கொண்டு வருகின்றனர் என்பது எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டு.
நேற்றைய தினம் கூட, கேரள சட்டசபையில் 61 பக்க உரையை ஒன்றரை நிமிடத்தில் வாசித்து
விட்டு வெளியேறி இருக்கிறார், ஆளுநர். இதைவிட ஒருபடி மேலாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் அனைவருக்கும் நினைவிருக்கும்.
இப்படி மசோதாக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு இடைஞ்சல்களை ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியோ பல்கலைக்கழக விவகாரம், திருவள்ளுவருக்கு காவி அணிவித்து புகைப்படம் வெளியிட்ட விவகாரம் என தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.
இரு நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் உள்ள கோதண்டராமசுவாமி கோயிலில் உள்ள பூசாரிகளை தமிழ்நாடு அரசு மிரட்டியுள்ளது என்று மறைமுகமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் அது பொய் என அந்த கோயிலின் அர்ச்சகர்களே முன் வந்து உண்மையை உரைத்தனர்.
அதன்பிறகு, நேற்று முன்தினம் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக விழாவில் “மகாத்மா காந்தியின் போராட்டம் வீண். நேதாஜிதான் உண்மையான தேசத்தந்தை” என்று காந்தியின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பல விஷயங்கள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரமும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
மகாத்மா காந்தியை இந்தியர்கள் தேசத் தந்தையாக போற்றுகிறார்கள். உலகத்தலைவர்கள் இந்தியா வரும்போதெல்லாம் காந்தி சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்கள்.
காந்தியால் இந்தியாவிற்கே மதிப்பும் மரியாதையும் கிடைத்துள்ளது. இந்தியத் திருநாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து குண்டடிபட்டு இறந்த காந்தியை மகாத்மாவாக ஏற்றுப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை, தூற்றுவதை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
நமது தேசத் தந்தை காந்தி என்று தொடக்கக் கல்வியில் இருந்து குழந்தைகளுக்கு அவரது தியாகத்தை சொல்லிச் சொல்லி தேச பக்தியை ஊட்டி வளர்த்து வருகிறோமே…அதெல்லாம் தவறா? தேசத்தந்தை மகாத்மா காந்தியை களங்கப்படுத்தலாமா?
யாகாவார் ஆயினும், நா காக்க; காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு
.
யாராக இருந்தாலும் இந்தக் குறள்வழி நடந்தாலே போதும், சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விடலாம். துன்பம் வராது.
இல்லை என்றால் இடியாப்பச் சிக்கல் தான்!