fbpx
Homeபிற செய்திகள்இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48 திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சேலம் மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48 திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சேலம் மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 எனும் மக்கள் உயிர் காக்கும் உன்னத திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சிகிச்சை பெற்றவர்கள் நெஞ்சார்ந்த நன்றி!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 18.12.2021 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திடஇ விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு- சாலை விபத்துக்களை குறைத்தல்- சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில்இ சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.
இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48” – திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள் – இல்லாதவர்கள் – பிற மாநிலத்தவர் – வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:
இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால் நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால் நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம். குறிப்பாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால் இந்நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால் நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையை கட்டணமில்லாமல் தொடரலாம்.

மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் மட்டுமல்லாமல் தனியார் காப்பீட்டிலோ அல்லது பணம் செலுத்தியோ சிகிச்சையை பெற விரும்பினால் நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனிநபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரலாம்.

சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் ”இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆத்தூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி அரசு மருத்துவமனைகள், மேட்டூர் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் 21 தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெறலாம்.
சேலம் மாவட்டத்தில் ”இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் ரூ.14.68 கோடி செலவில் சாலை விபத்தில் காயமடைந்த 12,305 நபர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில்இ அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம். விலை மதிப்பில்லாத மனித உயிரை பாதுகாக்கும் வகையில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிவதுடன் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் சிகிச்சை பெற்ற சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் தெரிவித்ததாவது:

எனது பெயர் மாதேஸ்வரன் (வயது 40). நான் சேலம் மாவட்டம்இ வாழப்பாடி பகுதியில் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். தினசரி வழக்கமாக காலையில் எனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்று வருவேன். அதேபோல் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்ப வந்தபோது இரவு நேரத்தில் எனது இரு சக்கர வாகனத்தின் மூலம் வீடு திரும்பும்போது எதிரே வந்த மற்றொரு வாகனம் என் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் எனது முகத்தில் காயம் ஏற்பட்டதோடு எனது இடது காலில் சிறிதாக எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து எனக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் உயர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கான முதல் 48 மணி நேரத்திற்கு ரூபாய் 1 இலட்சம் வரை சிகிச்சை மேற்கொள்ளலாம் என தெரிவித்து எனக்கான மருத்துவ சிகிச்சையினை மேற்கொண்டனர். எனது சிகிச்சைக்கான ரூபாய் 40 ஆயிரம் செலவினையும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவமனைக்கு தமிழக அரசால் செலுத்தப்பட்டது.

விபத்துகளால் உயிர் இழப்புகள் ஏற்படுவதை தவிர்த்து மக்களின் உயிர் காக்கும் உன்னத திட்டமான இன்னுயிர் காப்போம் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் சிகிச்சை பெற்ற சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் தெரிவித்ததாவது:
எனது பெயர் ஜெயராஜ் (வயது 75). நான் ஆத்தூர் வட்டம் அம்பேத்கர் நகரில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த சில நாள்களுக்கு முன்பு எனது மகனுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் என் மீது மோதியதில் நான் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எனது வலது கைப் பகுதியில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அருகில் உள்ளவர்களின் உதவியால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன்.

என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தார்கள்.
உடனடியாக எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அதன்படி சிகிச்சைத் தொகையாக ரூபாய் 45,000/- இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழக அரசால் செலுத்தப்பட்டுள்ளது. நான் தற்போது படிப்படியாக குணமடைந்து வருகிறேன்.

சாலை விபத்துக்கான 48 மணி நேர கட்டணமில்லா சிகிச்சையினை வழங்கி சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களின் இன்னுயிர் காத்திடும் வகையில் இத்திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு எனது சார்பிலும்இ எனது குடும்பத்தாரின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயராஜ் தெரிவித்தார்.

விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளித்து விட்டால் பெரும்பாலான உயிர்கள் காக்கப்படும். விபத்து ஏற்பட்டவுடன் அரசு மருத்துவ மனை போல தனியார் மருத்துவமனைகளிலும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இன்னுயிர் காப்போம் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். மருத்துவக் கட்டமைப்புகளில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நமது மாநிலம் முன்னிலையில் உள்ளது. இதற்கு வலிமை சேர்க்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டம் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

படிக்க வேண்டும்

spot_img