இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. வருகிற ஏப்ரல் 19 முதல் 7 கட்டமாக நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 96.80 கோடி பேர் வாக்க ளிக்க உள்ளனர்.
தேர்தல் அட்டவணையில் முதலில் இடம்பெறுவது வேட்புமனு தாக்கல். தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
தமிழ்நாட்டில் நேற்று அனைத்துக் கட்சி வேட் பாளர்களும் ஒட்டுமொத்தமாக வேட்புமனு தாக்கல் செய்தால் ஆங்காங்கே கட்சியினர் இடையே ஆங் காங்கே மோதல் வெடித்ததையும் காண முடிந்தது.
வட சென்னை தொகுதியில், யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் நீடித்தது. பதற்றமான சூழலும் நிலவியது. அதனால் அந்தப் பகுதி சாலைகளில் சுமார் 5 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உதகையில் ஒரே நேரத்தில் பாஜக வேட்பாளர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனும் அதிமுக வேட்பாளரும் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். இதனால் பிரச்னை உருவாகி, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை சாலை மறியலில் ஈடுபட்டார். போலீஸ் தடியடி நடந்திருக்கிறது. வேறுசில பகுதிகளிலும் வேட்புமனு தாக்கலின்போது ஏற்பட்ட பிரச்சினைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள்.
உலகின் மிகப்பெரிய தேர்தல் கட்டமைப்பை கொண்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1993-ல் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, 1998-ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 2014-ல் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபாட் இயந்திரம் மற்றும் வண்ண வாக்காளர் அட்டை ஆகியவற்றை அறிமுகம் செய்து, காலத்துக்கு ஏற்ப பல்வேறு சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தேர்தலில் 100 சதவீதம் ஆன் லைன் வேட்புமனு தாக்கல் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு சேவைகளை ஆன்லைன் மூலம் வழங்கும்போது இதனையும் அந்த லிஸ்டில் சேர்த்தால் நல்லது என்பதே மக்கள் எண்ணமாக இருக்கிறது.
எனவே காலத்துக்கு ஏற்ப, மனுதாக்கலிலும் 100% ஆன்லைன் முறையை கொண்டுவர வேண் டும். இதனை அமல்படுத்தினால் வேட்புமனு தாக்கலுக்கு 100 ரூபாய் கூட செலவாகாது. மிக முக்கியமாக சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் எழாது. ஐந்து நிமிடத்தில் வேலையை முடித்துவிட்டு வேட்பா ளர்கள் தங்கள் பிரசார பணிகளை கவனிக்கப் போய் விடலாம். ஆள்மாறாட்டமும் செய்ய முடியாது.
அடுத்து வரும் தேர்தல்களிலாவது ஆன்லைன வேட்புமனு தாக்கல் முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆனால் இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது நடைமுறையாக இருக்கிறது.
100 சதவீதம் ஆன்லைன் வேட்புமனு தாக்கலை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் துறையும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஒன்றிய அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து அழுத்தம் தந்து ஆன்லைன் வேட்புமனு தாக்கல் செய்யும் முறை அமலுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்!