சிலந்தியாற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டும் பணிகள் குறித்த தகவல் தமிழ்நாட்டில் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.
திருப்பூரை அடுத்துள்ள உடுமலையில் இருந்து சுமார் 25 கிமீ. தொலைவில் அமைந்துள்ளது தான் அமராவதி அணை. 90 அடி உயரம் கொண்ட இந்த அணை 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது.
1958இல் கட்டப்பட்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், இந்த அமராவதி ஆற்றுப்படுகை மூலம் 110 கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.
அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்கள் என்று பார்த்தால் அவை பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை ஆகும். இதற்கிடையே இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில் பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
இந்த தடுப்பணை அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவை குறைக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்தத் தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் கேரள அரசின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியை நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதனை ஏற்று தடுப்பணை கட்டுவதை கேரள அரசு நிறுத்த வேண்டும். இப்பிரச்னையில் இரு மாநில முதல்வர்களும் தலையிட்டு இருக்கிறார்கள். தமிழக விவசாயிகள் பாதிக்காத அளவில் நல்லதோர் முடிவு காணப்பட வேண்டும்.
நீண்ட எல்லைகளைக் கொண்டுள்ள தமிழகம் & கேரளா இடையேயான நல்லுறவில் சிறு விரிசல் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பது மிகமிக முக்கியம். ஏனென்றால் வணிகம் உள்ளிட்ட பல விஷயங்களில் இரு மாநில மக்களின் வாழ்வாதாரம் பின்னிப்பிணைந்து உள்ளது.
ஒரு தடுப்பணை விவகாரத்தில் நல்லுறவுக்கும் தோழமை உணர்வுக்கும் குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது.
முதலில் சிலந்தி ஆற்ற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேரள அரசு நிறுத்த வேண்டும். மு.க.ஸ்டாலின் கடிதத்திற்கு பினராயி விஜயன் என்ன பதில் சொல்லப்போகிறார்?