நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கு வதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன. எனவே, அரசியல் கட்சிகள் களத்தில் தங்களது இறுதிகட்டச் செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.
குறிப்பாக பாஜக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் பாஜக வென்றுவிட்டால், நேருவுக்கு அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை நரேந்திர மோடி பெறுவார்.
மறுபுறம் பாஜகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில், இந்தியா கூட்டணி என்கிற பெயரில் தேர்தலை எதிர்கொள்கிறது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.
மேலும் இந்த தேர்தலில் ஜம்மு – காஷ்மீர் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பல நாட்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். இது இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது.
“கடந்த 2018ம் ஆண்டில் மெகபூபா முஃப்தி தலைமையிலான அரசாங்கத்திற்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதில் இருந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் உள்ளது. அன்று முதல் ஜம்மு காஷ்மீர் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாக்கப்பட்டு வருவதால், ராஜ்யசபாவிலும் நான்கு இடங்கள் காலியாக உள்ளன. தேர்தலை நடத்தாமல் பாஜக அரசு காலம் கடத்துவது ஏன்? மக்கள் தீர்ப்புக்கு பயப்படுகிறார்களா? அம்மாநில மக்கள் எவ்வளவு காலம்தான் தேர்தலை எதிர்கொள்ளாமல் இருப்பார்கள்?
இந்நிலையில், இந்த முறை மாநிலத்தில் உள்ள 5 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. உத்தம்பூரில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, “இங்கே சட்டசபைத் தேர்தல் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்” என்று கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தோடு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தான் அம்மாநில மக்கள் எதிர்பார்த்தார்கள். அறிவிப்பு வரவில்லை. ஆனாலும் விரைவில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் மோடி தற்போது அறிவித்து இருக்கிறார்.
இது நாடாளுமன்றத் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்கான அறிவிப்பாக இருந்தாலும் சரி, முன்னோட்டம் பார்க்கும் தந்திரமாக இருந்தாலும் சரி வரவேற்கத் தக்கது. அங்கே முடங்கிக் கிடக்கும் ஜனநாயக விதை முளைத்துச் செடியாகி…மரமாகி தழைத்து வளர நீரூற்ற வேண்டிய கடமை ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனச் சொல்லும் பிரதமர் மோடி அவர்களே, எப்போது தேர்தல் என்பதையும் மிக விரைவாகச் சொல்லி விடுங்கள்.
ஜனநாயகத்தை முடக்கிய பாவம் நீங்கட்டும்!