அக்டோபர் 15 முதல் 19ம் தேதி வரை ஸ்பெயினின் மோட்டோ லேண்ட் அரகோனில் மோட்டோ மாணவர் சர்வதேச போட்டி 2025 நடைபெற்றது. இதில் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் இயந்திரப் பொறியியல் துறையைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் பொறியியல் குழுவான மோட்டோ அம்ருதா, ஆசியாவின் முதல் வெற்றியாளராக சாதனை படைத்துள்ளது.
எரிபொருள் (முழுமையாக புதுப்பிக்கத்தக்க எரிபொருள்) பிரிவில் புகழ்பெற்ற பெஸ்ட் ரூகி டீம் விருது இக்குழுவினருக்கு மோட்டோ எஞ்சினியரிங் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர் டானியல் உர்க்கிசு சான்சோவால் வழங்கப்பட்டது.
எட்டாம் பதிப்பாக நடைபெற்ற இந்த மோட்டோ மாணவர் போட்டி, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுள் நடத்தப்படும் மோட்டார் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகும். 20 நாடுகளைச் சேர்ந்த 86 குழுக்கள் இப்போட்டியில் பங்கேற்றன.
மாணவர்கள் மின்சாரம் மற்றும் இ&எரி பொருள் (100% புதுப்பிக்கத்தக்க எரிபொருள்) தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாதிரி மோட்டார் சைக்கிள்களை வடிவமைத்து, உருவாக்கி, பந்தயத்தில் ஈடுபடுத்தினர். இது புதுமை, நிலைத்தன்மை மற்றும் பொறியியல் சிறப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடைபெற்றது.
மோட்டோ அம்ருதா குழு, புதுமை, வடிவமைப்பு மற்றும் திட்ட அமலாக்கம் ஆகியவற்றை மதிப்பீடு செய்த எம்.எஸ்1 (பொறியியல் வடிவமைப்பு) கட்டத்தில் 14வது உலக தரவரிசையையும் கணிசமாகப் பெற்றுள்ளது. அம்ருதா விஸ்வ வித்யாபீடம், இயந்திரப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் (மூத்த குழு) எம்.சிவநேசன் இக்குழுவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.
ஸ்பெயினில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள்:
ஸ்ரீஹரிஷ்.ஆர் (தலைவர்), ராகவ் பாலணி குமார்.எஸ் (தொழில்நுட்ப தலைமை), அருண் விஜய்.ஏ, ஆர்..எல்.அஸ்வந்த், மிதுன்.கே.ஆர் மற்றும் மகாலட்சுமி.எம் ஆகியோர் அம்ருதாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.



