பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்தி மொழி பேசாத மாநிலங்களில் எப்படியாவது இந்தியை திணித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கொஞ்சம் கொஞ்சமாக இந்தியை திணிக்கப் பார்க்கிறது.
மேலும் இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தியிலேயே அரசு சார்பான கடிதங்களை அனுப்பி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தால் அப்போது மட்டும் அமைதியாக இருந்து விட்டு பிறகு மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். அதேபோல் ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களின் பெயர்களும் இந்தியிலேயே வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திட்டத்தின் பெயரை இந்தியில் வைக்க மறுத்ததால் ஒன்றிய அரசு நிதியை நிறுத்திவிட்ட ஓர் அவலம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. இது குறித்து அம்மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
கேரளாவில் உள்ள தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் பெயரை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியது. இந்தியில் பெயர் மாற்றினால் கேரளாவில் உள்ள கிராமப்புற மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
எனவே இந்தியில் பெயர் மாற்றம் செய்ய முடியாது என மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து ஒன்றிய அரசு இந்தியில் பெயர் மாற்றம் செய்ய மறுத்ததால் அந்த திட்டத்திற்கான நிதியை ஒதுக்க மறுத்துவிட்டது.
இந்த திட்டத்திற்காகக் கட்டப்பட்ட மையங்களில் பெயர் பலகையில் ஒன்றிய அரசு வழங்கிய ஆறு சின்னங்களைச் சேர்த்தோம். ஆனால் தற்போது இந்தியில் பெயர் மாற்றினால்தான் நிதி வழங்குவோம் என ஒன்றிய அரசு கூறுகிறது.
இதனால் இந்த திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்றிய அரசின் ஒதுக்கீடான ரூ.826 கோடியில் ஒரு தவணையைக் கூட ஒன்றிய அரசு மாநிலத்திற்கு வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மாநில திட்டத்துக்கான தொகையை விடுவிக்க இந்தியை வைத்து பேரம் பேசுவது அப்பட்டமான இந்தி திணிப்பு. அதுவும் ஒன்றிய அரசே இதில் ஈடுபடுவது என்பது மாநில அரசை வஞ்சிப்பது மட்டுமல்ல மக்களுக்குச் செய்யும் துரோகம்.
இந்தியை யார் வேண்டுமானாலும் படிக்கட்டும்; அதற்கு யாரும் இங்கே தடை போடவில்லை. அதே நேரத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநில மக்களுக்குப் புரியாத மொழியான இந்தியில் பெயர் வைத்தால் அதனால் யாருக்கு என்ன பயன்? அதனை ஒருபோதும் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இந்தி திணிப்பை தென் மாநிலங்கள் ஒருபோதும் ஏற்காது என்பது நாடறிந்த விஷயம். இதை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் எதிர்விளைவுகளே விளையும் என்பதை வரலாற்றைத் திரும்பிப்பார்த்தாலே புரியும்!