fbpx
Homeதலையங்கம்இடர்மிகு சூழலிலும் இன்பம் பொங்கட்டும்!

இடர்மிகு சூழலிலும் இன்பம் பொங்கட்டும்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. கலைஞர் ஆட்சியில் 2009ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரொக்க பணத்துடன், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் பொங்கல் பரிசை ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்குகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கடந்த 2ம் தேதி அரசாணை வெளியிட்டது.

அதன்படி தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் 238 கோடியே 92 லட்சத்து, 72 ஆயிரத்து, 741 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் கூடுதலாக தலா ரூ.1000 ரொக்கம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலை, பாலங்கள் பாதிப்புகள் மட்டுமல்லாது வீடுகளும், விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டன. ஒன்றிய அமைச்சர்களும் ஒன்றிய குழுவினரும் வந்து பார்த்துச் சென்றனர். ஆனால் ஒன்றிய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிவாரண நிதி கொடுக்கவில்லை.

தமிழ்நாடு அரசுதான் தனது நிதியில் இருந்து அடிப்படை பணிகளை செய்வதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கியது. அதோடு தற்போது பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு என்று தெரிவித்துள்ளார்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.

இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img