fbpx
Homeதலையங்கம்பொன்முடி அமைச்சராக ஆளுநர் முட்டுக்கட்டை!

பொன்முடி அமைச்சராக ஆளுநர் முட்டுக்கட்டை!

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடியை குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது.

இதன் காரணமாக, அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். அவரை மீண்டும் அமைச்சராக நியமிக்க, மார்ச் 13ம் தேதி அல்லது 14ம் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர் என் ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்கிறது தமிழ்நாடு அரசு. முதல்வர் பரிந்துரைத்த பிறகும், பதவி பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

சட்ட ரீதியான தடைகள் ஏதும் இல்லாதபோது மாநில அரசின் பரிந்துரையை நிறைவேற்றுவது தான் மாநில ஆளுநரின் கடமை ஆகும். ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றாததன் மூலம், தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளுக்கும், முடிவுகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதே தனது வேலை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அமைச்சராக பொன்முடிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்து விட்டதால், சட்ட ரீதியாக அணுகுவது மட்டுமே ஒரே வழி. அதனால் தான் உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு அணுகி இருக்கிறது.

சட்டம் தன் கடமையைச் செய்யும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை பொறுத்திருந்து தான் ஆக வேண்டும்.

பொன்முடியும் தான்!

படிக்க வேண்டும்

spot_img