மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் முடிந்தது.
நேற்று இறுதி நாள் என்பதால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டனர். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியும், கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலுக்கும் நாளை (ஏப்ரல் 19 ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
யாருக்கு வாக்களிப்பது? என முடிவு செய்யும் முன், வேட்பாளர்களின் தகுதி, செயல்பாடு, திறமை ஆகியவற்றைக் கவனிப்பது முக்கியம்.
ஆனால், நாடாளுமன்ற அமைப்பில் உறுப்பினர்கள் தனித்து இயங்க முடியாது. நாட்டைப் பாதிக்கும் சட்டங்களில் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலோ வாக்களிக்க மறுத்தாலோ அவர் பதவியை இழப்பார்.
எனவே கட்சிகள், அவற்றின் கொள்கைகளைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி வாக்களிப்பதும் முக்கியமானது. மக்களவைத் தேர்தலில் நாம் ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கு ஒட்டுமொத்த நாட்டின் மீதும் ஏதோ ஒரு விதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த புரிதலோடு வாக்களிப்பதே நமது முதன்மையான ஜனநாயக கடமை. அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.
வாக்குப்பதிவு செய்யும் நாளே தேர்தல் திருவிழாவின் முக்கியமான கொண்டாட்டம். கோடை வெயில் சுட்டெரித்தாலும் அதில் இருந்து நம்மை காத்துக் கொண்டு, இத்திருவிழாவில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
யாருக்கு வாக்களித்தால்… எந்தக் கட்சிக்கு வாக்களித்தால் நாட்டிற்கு நல்லது என்பதை சிந்தித்து… சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கத் தயாராவோம்.
இந்தியத் திருநாட்டில் நல்லாட்சி மலரட்டும்!