fbpx
Homeதலையங்கம்இலவசங்களை, வாரி வழங்கும் பாஜக… ஏன் இந்த விநோதம்?!

இலவசங்களை, வாரி வழங்கும் பாஜக… ஏன் இந்த விநோதம்?!

தமிழ்நாடு அரசு மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் டாக்டர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகியவற்றை அறிவித்த போதே அதற்கு சற்று எதிர்ப்பு கிளம்பியது. இலவசமாக வழங்குவது நாட்டுக்கு நல்லது அல்லது என்பது போல சிலர் விமர்சனத்தை முன்வைத்தனர்.

தான் அறிவித்து அமலுக்கு கொண்டு வந்த திட்டம் சமூக நலத்திட்டம் என்றும் அதனால் பெண்களின் சேமிப்பு அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இடித்துரைத்து இலவசம் என வாய் திறந்தவர்களின் நாவை அடக்கினார். அவர் சொன்னது போலவே மகளிரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர்ந்தது.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பின்பற்றி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கும் திட்டத்தை அறிவித்த காங்கிரஸ் இன்றைக்கு அங்கு ஆட்சிக் கட்டிலில் ஏறி இருக்கிறது.

முன்னதாக அந்த மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி இலவச திட்டத்தை கடுமையாக சாடினார். ஆனாலும் வேறு வழியின்றி அங்கே அவசரம் அவசரமாக சில இலவச திட்டங்களை பாஜக அறிவித்தது. அது வெறும் தேர்தலுக்கான அறிவிப்பு என்பதை உணர்ந்த வாக்காளர்கள் பாஜகவைத் துரத்தியடித்தனர்.

தற்போது 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் பலவும் இலவசத் திட்டங்களை அறிவித்து இந்த சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கின்றன.

பிரதமர் மோடி இலவசங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசினாலும் தேர்தல் நேரத்தில் பாஜக, இலவசங்கள் என்ற ஆயுதத்தை தவறாமல் கையிலெடுத்து விடுகிறது.

ஆம். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் (பாஜக) ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம தருவோம், 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர் தரப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். இது பிரதமர் மோடியின் கொள்கைக்கு எதிரானது தானே. அவரால் ஏன் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை?

அப்படியிருக்க, எதிர்க்கட்சிகளின் இலவசங்களை கடிந்து கொள்ளும் மோடி, சொந்த கட்சியின் இலவசங்கள் தொடர்பான அறிவிப்பை மட்டும் எதுவும் சொல்லாமல் கடந்து செல்கிறார்.

இது தான் பிரதமர் மோடியின் கொள்கைப் பிடிப்பா?
அவரை நோக்கி இலவச வாக்குறுதிகளை வழங்குவது ஏன் என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். ‘இலவசங்கள் என்று பிரதமர் மோடி உள்ளிட்டோர் பேசுவது ஏழைகளுக்கான நலத்திட்டங்களைத்தான். இத்தகைய திட்டங்களைத்தான் பா.ஜ.க எதிர்க்கிறது.

ஆனால், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை பா.ஜ.க அரசு வாரி வழங்குகிறது’ என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

‘பெரும் கார்ப்பரேட்களுக்கு வழங்கப்படும் அந்த இலவசங்களை பா.ஜ.க எதிர்ப்பதில்லை. கடந்த ஒன்பதாண்டு கால பா.ஜ.க ஆட்சியில், வரிச்சலுகை, கடன் தள்ளுபடி என ரூ.25 லட்சம் கோடியை பா.ஜ.க அரசு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது. இது விஸ்வரூப இலவசம் தானே’ என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

இலவசத் திட்டங்களுக்கு எதிராக இனியும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால் அது கேலிக்கூத்தாகத் தான் இருக்கும்.

ஆக, தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியின் சமூக நலத்திட்டங்களை இலவசம் என புறந்தள்ளமுடியாமல் பாஜக ஏற்றுக்கொண்டு விட்டது.
இனி, திராவிட மாடல் ஆட்சியின் சமூக நலத் திட்டங்களை அகில இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னெடுத்து தான் அரசியல் நடத்த முடியும் என்றாகி விட்டது. இதுவே திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுகவுக்கு வெற்றி தானே!

படிக்க வேண்டும்

spot_img