Homeதலையங்கம்முன்னாள் முதல்வரே… இதற்குமா போராட்டம்?

முன்னாள் முதல்வரே… இதற்குமா போராட்டம்?

பொங்கலுக்கு ஏழை எளியவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச வேட்டி & சேலை வழங்குவது என்பது காலங்காலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டும் அவை வழங்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 19-11-2022 அன்று சென்னை தலைமைச்செயலகத்தில், பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகளின் தரத்தினையும், சேலைகளின் வண்ணங்களையும் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.

அதன்படி வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி- சேலை வழங்காவிட்டால் போராட்டம் என்று எடப்பாடி பழனிசாமி ஓர் அர்த்தமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இப்படியா எடுத்தேன், கவிழ்த்தேன் என்பது போல செயல்படுவது? பொங்கலுக்கு வேட்டி & சேலை வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லையே. பிறகு ஏன் இந்த போராட்ட அறிவிப்பு? அதேபோல பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதெல்லாம் திமுக தலைமையிலான அரசுக்கு ஏதோ ஒரு வகையில் இடையூறு செய்ய வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தையே காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசியல் செய்வதை விட மோசமானது வேறு என்ன இருக்க முடியும்?.
வேட்டி & சேலை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம் குறித்த செய்திகள் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளிவந்தது.

இது கூட எடப்பாடி பழனிசாமி கண்ணில் படவில்லையா? அல்லது வேண்டுமென்றே தரம் குறைந்த குதர்க்க அரசியலை இவரும் கையிலெடுத்து விட்டாரா?

கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் முழுமையாக பொங்கல் திருநாளுக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்படும் என்பதில் ஐயமில்லை. அதற்காக ரூ.487.92 கோடி நிதியும் அப்போதே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.

1 கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் அதற்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்குகூட வராத சந்தேகம் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கிருந்து வந்தது?

இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி-சேலைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளுடன் தரமான நூல்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதோடு, திட்டத்தினை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பதிலடி தந்துள்ளார்.

இது போல முந்திரி கொட்டை போல முந்தி மூக்கறுபடுவதை இனியாவது எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்குமா போராட்டம்? இது, ஒரு முன்னாள் முதல்வருக்கு அழகல்ல!

படிக்க வேண்டும்

spot_img