தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 100 அடியில் 63 அடியாக சரிந்துள்ளது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும்,பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இதனால் வற்றாத ஜீவநதியான பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது.
இதனிடையே சிறுமுகை அருகே உள்ள காந்தையூர் பகுதியைச்சேர்ந்த தமிழ்ச்செல்வன்(45) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது,வாழை மரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று தென்பட்டுள்ளது.உற்றுப் பார்க்கையில் அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சிய டைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் முதலையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் கூறுகையில் கோடை காலம் துவங்கும் முன்னரே தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
அந்த வகையில் பவானிசாகர் அணியின் நீர்மட்டம் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் வெகுவாக சரிந்து உள்ளது. இதனால் நீரில் இருக்கும் முதலை அங்கிருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் உள்ள தமிழ்செல்வனின் தோட்டத்திற்கு வந்திருக்கலாம். தற்போது அதனை பிடிக்கும் பணியில் தங்களது வனக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 12 அடி நீளமுள்ள இந்த ராட்சத முதலையை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் பத்திரமாக மீட்டு பவானிசாகர் அணைப்பகுதியில் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.