தினசரி, மாத, வார பத்திரிகைகள் மட்டுமே இருந்த நிலை மாறி இன்றைக்கு தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலை தளங்கள் என செய்திகளை வெளியிடும் இணைய தளங்கள் வந்து விட்டன. முன்பெல்லாம் ஒரு சம்பவம் அல்லது ஒரு தலைவர் பேட்டி என்றால் அதனைத் தெரிந்து கொள்ள சில மணி நேரமாவது ஆகும்.
ஆனால் இப்போது நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் மூலம் அடுத்த நிமிடமே அறிந்து கொள்கிறோம். செய்திச் சேனல்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவரும் செய்திகள் உண்மையாகத்தான் இருக்கும் என வாசகர்கள் நம்பினர். இப்போதும் நம்புகிறார்கள்.
தற்போது சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்கள் அதிகரித்து வருவதால், உண்மைச் சரிபார்ப்பு அவசியமாகிறது.
அதனால் தான் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடக தளங்களிலும் வெளியாகும் தமிழக அரசு தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கு உண்மை சரிபார்க்கும் பிரிவு ஒன்றை உருவாக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தளம் சமூக ஊடக உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்து தெரிவிக்கும் வேலையைச் செய்யும். போலிச் செய்திகள் மற்றும் தவறாக தகவல்களைப் பரப்புபவர்கள் / தவறான உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்களைத் தடுப்பதே இந்த உண்மை தன்மை சரிபார்ப்புப் பிரிவின் நோக்கமாக இருக்கும்.
தமிழக அரசு உருவாக்கியுள்ள உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு பதிவுகளை நீக்கக் கேட்கும் என்று தமிழக அரசின் அரசாணையில் கூறவில்லை.
இருப்பினும், இது விவகாரங்களை சட்டம் மற்றும் காவல் துறைக்கு அனுப்பும்.
இந்த உண்மைச் சரிபார்ப்புப் பிரிவின் முதன்மைக் கவனம் வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்துவதாக இருக்கும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உண்மைச் சரிபார்ப்பு பிரிவு எடுக்கும் தகவல்களை நடவடிக்கை எடுக்க வேண்டிய தகவல்கள், நடவடிக்கை தேவையில்லாத தகவல்கள் பிரிக்கும். நடவடிக்கை எடுக்க வேண்டிய தகவல்கள் வரிசையில் வகைப்படுத்தப்படும் தவறான தகவல்கள் மற்றும் போலியான தகவல்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அரசாங்கத்தின் சட்ட மற்றும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்படும்.
அதே நேரத்தில் தமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த உண்மை சரிபார்ப்பு பிரிவு, மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.
தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது!