fbpx
Homeதலையங்கம்ஊட்டிக்கு இ-பாஸ் முறை ரத்து செய்ய எதிர்பார்ப்பு!

ஊட்டிக்கு இ-பாஸ் முறை ரத்து செய்ய எதிர்பார்ப்பு!

தற்போது கோடை வெயில் 109 டிகிரி வரை கொளுத்தி வாட்டி வதைக்கும் நிலையில் மலைகளின் ராணி ஊட்டிக்கும் மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கும் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது தொடர்பான வழக்கில், வருகிற மே 7 ம் தேதி முதல் ஜூன் 30 வரை மேற்கண்ட இரு கோடை வாசஸ்தலங்களுக்கும் இ&பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் இந்த உத்தரவால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றாலும் உள்ளூர் சிறு வியாபாரிகளும் மலைவாழ் மக்களும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்வார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

வருடத்தில், ஓரிரு மாதங்கள் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகள் அம்மலைவாழ் மக்களின் பெரும் பொருளாதார நம்பிக்கையாக உள்ளது. அங்கு செல்லும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற உத்தரவு செயல்படுத்தப்பட்டால், சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய உள்ளூர் மக்கள், மலைசார்ந்த விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாவர்கள். பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள். அது அவர்களுக்குப் பேரிழப்பாக அமையும்.

மேலும் இ-பாஸ் திட்டத்தின் மூலமாக சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பியிருக்கும் உள்ளூர் வாகனங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு நெருக்கடிகள் உருவாகும்.
அதனால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுவழி என்ன? என்பதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து இ&பாஸ் முறையை ரத்து செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
போதுமான பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தித் தரலாம், கூடுதலாக காவலர்களை நியமித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தலாம் என்று பொதுமக்கள் தரப்பில் யோசனைகள் முன்வைக்கப்படுகிறது.

மாற்று ஏற்பாடுகளை விரைவாக செய்வதோடு உயர்நீதிமன்றத்தை அணுகி இ-பாஸ் முறையை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?

படிக்க வேண்டும்

spot_img