பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேசுகையில், “கடந்த சட்டமன்ற தேர்தலில் 30 இடங்களில் பாஜக-வுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக வெற்றி பெற்றது. 2019 தேர்தலில் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றோம். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி தோற்றோம்?. கர்நாடகாவில் வெற்றி பெற்றோம், கேரளாவில் வாக்கு சதவீதம் உயர்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டது. தமிழகத்தில் வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டதற்கு அதிமுகவின் ஊழலை நாங்கள் சுமந்ததுதான் காரணம். தேர்தலுக்கு பிறகு அதிமுக என்கிற ஒரு கட்சி இருக்காது” என்றார்.
இதற்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதுவரை திமுகவை நோக்கியே தனது விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வந்த எடப்பாடி பழனிசாமி பாஜகவை விமர்சிப்பதில் மட்டும் அடக்கி வாசித்து வந்தார். தற்போது அவர் திடீரென கொதித்தெழுந்துள்ளார். கூட்டணியை முறித்தாலும் பிரதமரை விமர்சிப்பதை மட்டும் தவிர்த்து வந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது அவரையும் எதிர்த்து உரத்த குரலில் பேசத் துணிந்து விட்டார்.
இந்த சூழலில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.கவுக்கு புதிதாக ஒரு தலைவர் (அண்ணா மலை) வந்துள்ளார். பேட்டி கொடுப்பது மட்டுமே அவர் வேலை. விமானத்தில் ஏறும் போதும், இறங்கும்போதும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக் கிறார். இவர் பேட்டி கொடுத்தே மக்களை நம்பவைத்து வாக்கு பெற முயற்சி செய்கிறார். இவரைப் போல எத்தனை தலைவர்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.
காவரி நதிநீர் பிரச்னை தீர்வுக்கு பிரதமரும், அண்ணாமலையும் வாய் திறந்தார்களா? மத்தியில் இருந்து (பிரதமர் மோடி) அடிக்கடி வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். நேராக ஏரோ பிளேனில் வந்து இறங்குகிறார்கள். சாலையில் அப்படியே சென்று என்ன பயன்? மக்கள் ஓட்டு போடுவார்களா?. தமிழக மக்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள். ஏமாற்று வேலைகள் எல்லாம் இங்கு நடக்காது.” என ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
இதன் மூலம் இதுநாள் வரை பாஜகவை தாக்கி பேசாமல் இருந்துவந்த எடப்பாடி தற்போது அடித்து ஆட ஆரம்பித்துவிட்டாரோ எண்ணத் தோன்றுகிறது. பாஜகவும் அதிமுகவும் கள்ள உறவில் இருப்பதாக திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அவரிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
அண்ணாமலை பக்குவம், அனுபவம் இல்லாத அரசியல்வாதி, அரசியலில் கத்துக்குட்டி என்று தான் அதிமுக மட்டுமல்ல பிற கட்சிகளும் சான்றளித்து வருகின்றன.
அதிமுக கடந்த 52 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்திருக்கிறது. பெரிய கட்டமைப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட கட்சியை வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டும் வைத்திருக்கும் பாஜக, வரும் தேர்தலுடன் அதிமுக காணாமல் போய்விடும் என சொல்வது எந்த விதத்திலும் நியாயமாக இருக்க முடியாது.
அதிமுக வெற்றிக்கு நாங்கள்தான் காரணம் என அண்ணாமலை சொல்வதை பார்த்து சின்ன குழந்தை கூட சிரிக்கும், மிகவும் சிறுபிள்ளை தனமான செயலாகவே பார்க்கப்படுகிறது.
பா.ஜ.கவுடன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி உணர்ந்ததால்தான் கூட்டணியில் இருந்து வெளியேறினார். இருப்பினும் பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை. தற்போது பேசத்தொடங்கி இருக்கிறார்.
இது போதுமான அளவுக்கு இல்லை. எனவே இன்னும் அழுத்தமாக பாஜகவை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ய வேண்டும்.
அப்போதுதான் அண்ணாமலை போன்றவர்கள் விமர்சனம் செய்வதில் இருந்து அதிமுகவால் வெளியில் வர முடியும். கட்சியையும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்!