கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, வனச்சரக பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடக வன பகுதிகளை இணைக்கும் வழித்தட பாதை வனப் பகுதியில் உள்ளதால் வலசை செல்லும் யானை கூட்டங்கள் கடந்து செல்வது வழக்கம். இடம் பெயர்ந்து செல்லும் யானைகள் வனத்தினுள் தங்களது தாகம் தீர்க்க தண்ணீர் கிடைத்தால் கடந்து சென்று விடும்.
காட்டுக்குள் தண்ணீர் கிடைக்காத போது அவை காட்டை ஒட்டி உள்ள ஊருக்குள் புகுந்துவிடும் நீரை தேடி யானைகள் கிராமங்களுக்குள் புகுவதை தடுக்கும் நோக்கில் வனத்தினுள் ஆங்காங்கே சுமார் 32 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தொட்டியில் இருக்கும் நீரை அருந்தும் யானைகள் அமைதியாக கடந்து சென்று விடுகின்றன.
தற்போது கோடை காலம் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் வனத்துறை சார்பில் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் மற்றும் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள அரசு மரக்கிடங்கு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் காலை மற்றும் மாலை நேரங்களில் காட்டு யானைகள் வந்து தண்ணீர் குடித்து தனது தாகத்தை தீர்த்து செல்கின்றன.
வன விலங்குகளுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்தை போக்க வனத்துறையினர் ஏற்படுத்தியுள்ள குட்டை மற்றும் தொட்டிகளால் வனவிலங்குகள் மகிழ்ச்சியாக தண்ணீர் குடித்து செல்கின்றன.