மே முதல் தேதியிலிருந்து அனைத்து தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளிலும் ரொக்கமாக பணம் கொடுத்து டிக்கெட் பெறும் நடைமுறையோடு, மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியும் அமலுக்கு வந்துள்ளது.
1068 வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளில் இனி டிக்கெட் எடுக்க ரொக்கமாக பணம் கொடுக்கத் தேவையில்லை. வங்கி அட்டைகள், ஜி-பே, போன் பே போன்றவற்றின் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இது பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பயணியிடம் இருந்து ரொக்கமாக பணத்தை வாங்கி டிக்கெட் கொடுப்பதற்கும் மீதிப் பணத்தை எடுத்து கொடுப்பதற்கும் ஆகும் நேரத்தில் மின்னணு பரிவர்த்தனை மூலம் டிக்கெட்டை நடத்துநரால் எளிதாகக் கொடுத்து விட முடியும்.
அடுத்தகட்டமாக பிற அரசு போக்குவரத்துக் கழகங்களின் வெளியூர் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுப்படுத்தலாம். தனியார் பேருந்துகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
அதற்கு அடுத்தகட்டமாக அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் மின்னணு டிக்கெட் வழங்குவதைக் கொண்டு வரலாம். மாநகரப் பேருந்துகளில் அதிகமானோர் பயணித்தாலும் போகப்போக எல்லாம் பழகிவிடும்.
மின்னணு டிக்கெட் வழங்குவதன் மூலம், சில்லறை பிரச்னையும் அதனால் பயணிக்கும் நடத்துனநருக்கும் இடையே அவ்வப்போது நடக்கும் வாக்குவாதங்களுக்கும் விடை கொடுத்து விடலாம் அல்லவா?
தற்போது குறைந்தளவு பயணிகளுக்கே பயன்தரும் இத்திட்டம் விரிவுப்படுத்தும் போது செல்போன் பயன்படுத்தும் பெரும்பாலான பயணிகளின் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை!