Homeதலையங்கம்தேர்தல் அரசியலில் மகளிர் புறக்கணிப்பு!

தேர்தல் அரசியலில் மகளிர் புறக்கணிப்பு!

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால், தேர்தல் களத்தில் மகளிர் பங்களிப்பு என்பது மிக மிக குறைவாக இருக்கிறது.

தேர்தல் அரசியலில் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் முன்வரவில்லை என்பதையே 2024 மக்களவைத் தேர்தல் களம் எடுத்துக்காட்டுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 மகளிர் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலில் மகளிரின் பங்கேற்பு என்பது 8 சதவீதமாகும்.

மகளிருக்கு சம உரிமை என கூறும் அரசியல் கட்சிகளின் முழக்கம், மேடையுடன் நிறைவு பெற்றுவிடுகிறது என்பதையே இது காட்டுகிறது. 6 தொகுதிகளில் ஒரு பெண் கூட போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வட இந்தியாவில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மகளிர் எண்ணிக்கை இதைவிட குறைவாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதுபோல், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிரின் உரிமைகளை மீட்பதற்கான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமானால் அவர்களுக்கான தொகுதிகளை அரசியல் கட்சிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் சம உரிமை கிடைக்கும்.

பெண்ணுரிமை பற்றி பேசும் கட்சிகளுக்கு மத்தியில், சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் தனது வேட்பாளர்கள் பட்டியலில் மகளிருக்கு 50 சதவீத வாய்ப்பு வழங்கி வருவது பாராட்டத்தக்கது.

திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பெரிய கட்சிகள் அடுத்த தேர்தல்களிலாவது தங்கள் வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் தராவிட்டாலும் 33 சதவீதத்தையாவது முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img