fbpx
Homeதலையங்கம்ராஜினாமா மர்மம் - வாயை திறப்பாரா அருண் கோயல்?

ராஜினாமா மர்மம் – வாயை திறப்பாரா அருண் கோயல்?

கடந்த 2019 மார்ச் 10 அன்று நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இப்போது அதே காலகட்டத்தில்… அதே நாளில் (நேற்று) இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் உச்சகட்டத்தில் இருந்து வரும் நிலையில் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பதன் மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணையர் குழுவில் 3 பேர் இடம்பெற்றிருக்க வேண்டும். இதில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார்.

இப்போது அருண் கோயலும் ராஜினாமா செய்திருப்பதால் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார்.
அருண் கோயலின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு ஆண்டு வரை இருக்கும் நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

அருண் கோயலின் ராஜினாமாவை உடனடியாக ஜனாதிபதி ஏற்றுக்கொண்டது ஏன்? தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் ஏதேனும் கருத்து மோதல் ஏற்பட்டதா? அல்லது பாஜக அரசு, அருண் கோயலுக்கு அழுத்தம் கொடுத்ததா? தேர்தலை தள்ளி வைக்க திட்டமா? அல்லது புதிதாக 2 தேர்தல் ஆணையர்களை பிரதமர் மோடி நியமிக்க விரும்புகிறாரா? பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? பாஜகவுக்கு இவரை விட விசுவாசமான ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? ஏதோவொரு ரகசியத் திட்டத்தை முன்வைத்துதான் இவ்வாறு ஒன்றிய பாஜக அரசு செய்கிறது என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் சந்தேகக் கேள்வி எழுப்பி வருகின்றன.

அருண் கோயல் பாஜகவின் தலைமை நிலைய நிர்வாகி போலவே செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உண்டு. இந்த சூழலில் அவரே ராஜினாமா செய்திருக்கிறார் என்றால் அவருடைய மனதிற்கே பிடிக்காத ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
அவரது விலகலால் நாட்டுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏனென்றால் நம் இந்திய ஜனநாயகம் தோன்றிய காலம் முதல் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே கிடையாது.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தன்னாட்சி அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசின் அமைப்புகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அந்தப் பட்டியலில் தேர்தல் ஆணையமும் இடம்பிடித்து விட்டதா? என்ற சந்தேகம் நாட்டு மக்களின் கவலையாக மாறிவிடக் கூடாது.

ஏனென்றால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதற்கான அடிப்படையே தேர்தல். வாக்களிப்பது நாட்டு மக்களின் உரிமை. வாக்குகள் தான் ஜனநாயகம் என்ற ஆலமரத்தின் ஆணி வேர். பதவிக்காக எதையும் செய்யத் துணியும் அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பதற்கே, வானளாவிய அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் உள்ளது.

அருண் கோயல் ராஜினாமாவுக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அருண் கோயலின் ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்பதை பிரதமர் மோடியோ ஒன்றிய அரசோ விளக்க முன்வரலாம். அப்படியே விளக்கம் எதையும் கொடுத்தாலும் இந்த தேர்தல் நேரத் தருணத்தில் அதன் உண்மைத் தன்மை வெளிப்படுமா? என்பதில் சந்தேகம் தான் வரும்.

ஆக, தனது ராஜினாமாவின் பின்னணி என்ன? என்ற உண்மையை அருண் கோயலால் மட்டுமே நாட்டு மக்களுக்கு விளக்க முடியும் … விளக்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

டி.என்.சேஷன் போன்ற சிங்கங்கள் அமர்ந்திருந்த சிம்மாசனத்தின் மாண்பைக் காப்பதற்காகவாவது, வாயைத் திறப்பாரா, அருண் கோயல்?

படிக்க வேண்டும்

spot_img