2017ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் தேர்தல் பத்திரங்கள் சட்டம். அதனை அப்போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
இந்த திட்டத்தின் மூலம் நிதி வழங்குவோரின் பெயர்கள் மற்றும் விவரங்கள் பொது வெளியில் வெளியிடப்படாது.
மேலும், நிதி வழங்குகிறவர்கள் ரூ. 1000, ரூ.10,000…ரூ.1 கோடி என எவ்வளவு தொகை வேண்டுமானாலும் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா மூலம் வழங்கலாம் என்று தேர்தல் பத்திர திட்ட வரையறைகள் வகுக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் (2017-18 முதல் 2021-22), தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் பெற்ற நிதி விவரம் வெளியிடப்பட்டது. அதன் படி, தேசிய அளவில் அரசியல் கட்சிகள் பெற்ற தொகை ரூ.9,187 கோடி. அதில் ரூ. 5271 கோடி நிதி, பா.ஜ.க விற்கு மட்டும் தரப்பட்ட நிதியாகும். இந்த தொகை, காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற அனைத்து கட்சிகள் பெற்ற நிதிகளை விடவும் அதிகமாகும்.
1.பெரும்தொகை பா.ஜ.க விற்கு கிடைப்பதற்கு காரணம், தனியார் நிறுவனங்களுக்கு கைமாறாக ஒன்றிய பா.ஜ.க அரசால் செய்து தரப்படும் அதிகார உதவிகளாகத் தான் இருக்க முடியுமே தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
2.நிறுவனங்களின் பெயர்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டால் தாங்கள் எந்தெந்த நிறுவனங்களுக்கு எல்லாம் ஆதரவானவர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விடும் என்று அஞ்சியே இப்படி ஒரு யுக்தியை கையாண்டது பாஜக அரசு.
3.ஐடி, ஈடி ஆகிய விசாரணைக் குழுக்களிலிருந்து, பா.ஜ.க வை தற்காத்து கொள்ளவே தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இப்படி எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியபோதும் அவற்றை எல்லாம் தனக்கிருந்த மெஜாரிட்டி பலத்தைக் காட்டி பாஜக உதாசீனப்படுத்தியதால் தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நாமும் 2-11-23ம் தேதிய ‘பிற்பகல்’ நாளிதழில் மக்கள் உரிமையைப் பறிக்கும் தேர்தல் நன்கொடை பத்திரம்!
என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டி, யார் வேண்டுமானாலும் ஒரு கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் மூலம் கட்சி நிதி பெறலாம் என்றால், அது அரசியல் அறமா? பொது ஒழுக்கச் சிதைவைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? என்ற கேள்வியை முன்வைத்து இடித்துரைத்திருந்தோம்.
இன்றைக்கு தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும், இதுவரை, நிதி வழங்கியவர்கள் விவரங்களை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என்றும் ஒன்றிய அரசிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
லஞ்சம் மற்றும் கமிஷன் பெறும் வழியாக தேர்தல் பத்திரங்களை பாஜக பயன்படுத்தியது. இன்று அது நிரூபணம் ஆகியிருக்கிறது. மீண்டும் கிழிக்கப்பட்டிருக்கிறது பாஜக முகமூடி
என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்திருப்பதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பா.ஜ.க. கடந்த 6 வருடங்களாக உச்சநீதிமன்ற கூற்றுபடி அரசியலமைப்புக்கு முரணான ஒரு திட்டத்தின் பல ஆயிரம் கோடிகளை நன்கொடையாக பெற்று அதனைக் கொண்டு பல தேர்தல்களில் வெற்றியை பறித்திருக்கிறது என்பது பட்டவர்த்தனமாக தெளிவாகி இருக்கிறது.
அந்த வெற்றிகளெல்லாம் ஜனநாயக வெற்றியா? போலி வெற்றியா? என்று கேள்வி எழுப்பி மக்கள் மன்றத்தில் விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பு மூலம் வாக்குகள் மூலம் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை நிலை நிறுத்தி உள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளது.
ஆம், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது, ஜனநாயக வரலாற்றின் முக்கிய மைல் கல் என்றால் மிகையாகாது!