fbpx
Homeதலையங்கம்தமிழகத்தின் கல்வித்தரம் வானுயர இருக்கிறது!

தமிழகத்தின் கல்வித்தரம் வானுயர இருக்கிறது!

இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தான் திறமையான மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் உலக அளவில் தலைசிறந்த வல்லுநர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் தான். இதற்கு காரணம் தமிழ்நாட்டில் இருக்கும் கல்வியின் தரம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதன் காரணமாகவே, பிற மாநிலங்களை காட்டிலும் பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.
தமிழகத்தில் இவ்வாறு கல்வித்தரம் சிறந்து விளங்குவதால், இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து கல்வித்துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் இங்கு வந்து நமது கற்றல், கற்பித்தல் முறைகள் குறித்து அறிந்து செல்கின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்வித்துறை உயரதிகாரிகள் சென்னை வந்து, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இங்குள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் எந்தெந்த பாடங்களுக்கு எந்தெந்த முறைகளில் கற்பிக்கின்றனர்; மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க எதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை அவர்கள் கேட்டறிந்தனர். அவர்களுக்கு நமது கல்வித்துறை, செயல் வடிவத்திலும் அதுகுறித்து விளக்கம் அளித்தது.

இதனை பார்த்த பீகார் கல்வித்துறை உயரதிகாரிகள், தமிழகத்தில் கல்வித்தரமும், கற்பித்தல் முறையும் வானுயர இருப்பதாகவும், இதை தாங்கள் வியந்து பார்ப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் இருக்கும் கல்வித்தரத்தை போல பீகாரிலும் செயல்படுத்த தாங்கள் முயற்சி செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பாடப்புத்தகங்கள் மிகவும் எளிமையானதாகவும், அதே சமயத்தில் ஆற்றல் மிக்கதாகவும் இருக்கும். பாடப்புத்தகங்களை திறமையான கல்வியாளர்கள் குழு தயாரிப்பதும், அவற்றை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதை ஆராய்ச்சிகள் மூலமாக செயல்படுத்துவதுமே இதற்கு காரணம் ஆகும். அதேபோல கற்றல், கற்பித்தலுக்கும் சிறந்த பயிற்சிகள் தமிழ்நாட்டில் வழங்கப்படுகின்றன. இதனைப் பார்த்து பீகாரைச் சேர்ந்த கல்வித்துறை உயரதிகாரிகள் மிரண்டு போய் பாராட்டி இருக்கிறார்கள்.

வீடாக இருந்தாலும் மாநிலங்களாக இருந்தாலும் ஒன்றியமாக இருந்தாலும் அதனதன் உயர்வுக்கு அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது கல்வி. அதனையே பிறமாநிலங்கள் வியந்து பாராட்டுகிறது என்றால் தமிழ்நாட்டின் சிறப்புக்கு வேறு என்ன சான்றிதழ் வேண்டும்?

கல்வியிலேயே முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, பிற துறைகளிலும் நம்பர் 1 இடத்தைப் பெற்று சாதனை படைப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

படிக்க வேண்டும்

spot_img