சமீபகாலமாக பெரும்பாலான வாகனங்களில் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் பதிவு எண் தகடு (Registration Number Plates) மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக உள்ளது.
இந்த பிழையான பதிவு எண் தகடுகள் கொண்ட வாகனங்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போதும் விபத்துக்கள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் பொழுதும் அவற்றின் பதிவு எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
மத்திய , மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு பிறப்பித்துள்ள முறையில் தான் நம்பர் பிளேட் இருக்க வேண்டும்.
ஆனால், மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராக வாகன உரிமையாளர்கள் தாங்கள் விரும்பிய அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர்களின் படங்களை நம்பர் போர்டில் எழுதவும் ஸ்டிக்கர் மூலமும் ஒட்டி வருகின்றனர். மேலும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நம்பர் எழுதி உள்ளனர். இது சட்டவிரோதமானது.
சட்டவிரோதமாக இருக்கும் வாகனத்தின் நம்பர் போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, கடுமையாக எச்சரித்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது.
மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் போர்டுகளில் அரசு விதிமுறையின் படி அந்த வண்டியின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும். வேறு எந்த வகையிலும் எழுத்தோ தலைவர்களின் படமோ நடிகர்களின் படமோ இடம்பெற கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விதிகளை மீறிய நம்பர் போர்டுகளை அகற்ற வேண்டும்; விதி மீறிய வண்டிகளை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும் என எச்சரித்து உத்தரவிட்டுள்ளனர்.
ஹெல்மெட் அணியாதவர்கள், டிரைவிங் லைசென்ஸ் & இன்ஸ்சூரன்ஸ் இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது விதிமீறிய நம்பர் பிளேட்கள் பொருத்திய வாகனங்கள் மீதும் காவல்துறையினர் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதே நீதிமன்ற உத்தரவின் சாராம்சம்.
என்னதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் இதுபோன்ற குற்றங்கள் குறைந்த பாடில்லை. வீட்டைவிட்டு வெளியே வந்தால் விதிமீறி வாகனங்களை இயக்க முடியாது என்ற அச்சம் வாகன ஓட்டுநர்களுக்கு எழ வேண்டும்.
அதனை இடைவிடாச் சோதனைகள் மூலம் காவல்துறையினரால் செய்ய முடியும். இந்த நிலை உருவாக்கப்பட வேண்டும். அரசின் சட்ட திட்டங்களையும் நீதிமன்ற உத்தரவுகளையும் நாம் மதித்து தானே ஆக வேண்டும்.
எனவே, வாகன ஓட்டுநர்கள் அரசின் விதிமுறைப்படி செயல்பட்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!