பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டின் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை தலா ரூ.2,000 வீதம் என, மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி வழங்கப்படுகிறது.
பிப்ரவரி 2019ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமரின் கிசான் திட்ட பயானாளிகள் எண்ணிக்கை 11 வது தவணையின்போது 67% சரிந்துள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது. 2019 தேர்தலுக்கு முன்னர் பாஜக தான் அறிவித்த மெகா திட்டமாக பறைசாற்றிக் கொண்ட இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலையைக் கண்டு சமூக ஆர்வலர்கள், விவசாயிகளும் வேதனை அடைந்துள்ளனர்.
இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 2019ல் பயனாளிகள் எண்ணிக்கை 11.84 கோடியாக இருந்தது. 11வது தவணையை 3.87 கோடி விவசாயிகள் மட்டுமே பெற்றுள்ளனர். சமீபத்தில் வழங்கப்பட்ட 12வது தவணையில் பயனாளர்கள் எண்ணிக்கை பெருமளவில் சரிந்துள்ளது. இந்த சரிவு 6வது தவணையில் இருந்தே ஆரம்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2019ல் 46.8 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். இந்நிலையில் இந்த அக்டோபரில் 23.04 லட்சம் விவசாயிகளே பயனடைந்துள்ளனர். இது அதிர்ச்சியாக இருக்கிறது. 2022 புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது பாதியளவு விவசாயிகள் பயனடையவில்லை எனத் தெரிகிறது.
ஏன் இந்த சரிவு? இவ்வாறாக பயனாளிகள் எண்ணிக்கை குறைந்ததற்கு தர்க்க ரீதியாக எந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. இதைப் பார்க்கும் போது மத்திய அரசு மெல்ல மெல்ல இத்திட்டத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்து விட்டதோ என்றே விவசாயிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை ஒன்றிய அரசு செம்மையாக நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தகுதியான ஒரு விவசாயி கூட விடுபட்டு விடாமல் பயனடையும் வகையில் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
அனைவரின் வயிற்றுக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கலாமா-?