கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின.
விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை அப்போது நிராகரித்தன.
ஆனால் தற்போது நீதிமன்றத்தின் அணுகுமுறை மாறி உள்ளது. எதிர்க்கட்சிகளின் குரலை நீதியரசர்கள் கேட்டு விசாரணை நடத்தும் நிலை உருவாகி இருக்கிறது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டு வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய நடைமுறையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் புதிய பிரிவை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளதால் தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி ஒரு தொகுதியில் 2 சதவீதம் வாக்குப்பதிவில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது என தேர்தல் ஆணையமே கூறுகிறது.
உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள 22 லட்சத்து 30 ஆயிரம் வாக்களர்களில் 2 சதவீதம் வாக்கு என்பது 46 ஆயிரம் வாக்குகள். அப்படியெனில் ஏறத்தாழ 46 ஆயிரம் வாக்குகள் வரையில் தவறு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 46 ஆயிரம் வாக்குகள் என்பது சாதாரண விஷயம் அல்ல.
அதனால் தான் விவிபேட் ஒப்புகைச்சீட்டை நூறு சதவீதம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தை திமுக நாடியுள்ளது
என வழக்கை தாக்கல் செய்த அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இது ஒருபுறமிருக்க, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க முடியுமா என்று ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போது இருக்கும் நடைமுறையில், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் பதில் கோரியுள்ளது.
ஜனநாயக தேர்தலில் வாக்குரிமையும் முக்கியம். தாங்கள் செலுத்தும் வாக்குகள் சரியான சின்னத்தில் பதிவாகிறதா என்பதும் முக்கியம். தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை அதை விட முக்கியம். இதில் சந்தேகத்திற்கு இடமே இருக்கக் கூடாது.
இவற்றையெல்லாம் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களின் கைகளில் வந்துள்ளது. நிச்சயம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை!