fbpx
Homeதலையங்கம்பன்முகத் தன்மைக்கு வேட்டு வைக்காதீர்!

பன்முகத் தன்மைக்கு வேட்டு வைக்காதீர்!

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. முழுமையாக அரசியல் நோக்கத்திற்காகவே என்று கூறி காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஒரு கும்பல் கிறிஸ்தவ தேவாலயத்தின் மேல் ஏறி, காவி கொடிகளை ஏற்றிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபுவாவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுகிழமை அன்று வழக்கம் போல ஜெபக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அங்கு வந்த சிலர் தேவாலயத்தின் மீது ஏறி, அங்கிருந்த சிலுவையில் அவர்களின் மதத்திற்கான கொடியை ஏற்றியுள்ளது.

இதனை அங்கிருந்த தேவாலயத்தின் போதகர் தடுத்து நிறுத்த முயன்ற நிலையில், அவரை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு மதத்தினரை பிற மதத்தினர் புண்படுத்தும் எந்த ஒரு சம்பவத்தையும் அரங்கேற்றக் கூடாது. இதுபோன்ற சின்னச்சின்ன தவறுகளே பெரும் பாதிப்பை உருவாக்கியதற்கான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இந்திய ஜனநாயகம், இத்தனை நாளும் நீடிக்கக் காரணமாக இருந்த அதன் பன்முகத்தன்மைக்கு, இது போன்ற ஒருசிலரின் தகாத செயல்கள் சவால் விடுக்கிறது.

மதங்கள் பலப்பலவாக இருந்தாலும் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது தானே நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய வழி. அனைத்து சமயத்தினரும் அவரவர் வழிபாட்டு முறைகளோடு நாட்டில் அமைதியாக வாழ வேண்டும்.

அதற்காக, அநாகரீக நிகழ்வுகள் நடக்காத வாறு அனைத்து மத அமைப்புகளும் அவற்றின் தலைவர்களும் தேவையான சமத்துவ நடவடிக் கைகளை முன்னெடுக்க வேண்டும். அது தான் உலக அரங்கில் இந்தியாவிற்கு உரிய உயர்ந்த இடத்தை எப்போதும் நிலைக்கச் செய்யும்.

மத துவேஷங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் & வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!

படிக்க வேண்டும்

spot_img