fbpx
Homeதலையங்கம்பாஜக கூட்டணி வியூகம் - வெற்றி மாலை யாருக்கு?

பாஜக கூட்டணி வியூகம் – வெற்றி மாலை யாருக்கு?

பாஜக கூட்டணியா, அதிமுக கூட்டணியா? என பாமக திணறிக் கொண்டிருந்தபோது, மதில் மேல் பூனை போல என்ற உவமையைச் சொல்லி, பூனை நிச்சயம் பாஜக பக்கம் தான் தாவும் என முன்கூட்டியே கணித்துச் சொல்லியிருந்தோம். அது பலித்து விட்டது. பாமகவுக்கு 10 தொகுதிகளை பாஜக ஒதுக்கி உடன்பாடு எட்டப்பட்டது.

வன்னியர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டைத் தந்த அதிமுகவை புறம்தள்ளிவிட்டு பாஜகவை பாமக கட்டி அணைத்தது ஏன்?. தேர்தலில் வெற்றி தோல்வி எப்படி இருந்தாலும் அன்புமணிக்கு மாநிலங்களவை எம்பி பதவி அல்லது ஒன்றிய அமைச்சர் பதவி அல்லது இரண்டுமே கொடுக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தி இருக்கிறது பாஜக.

ஒன்று…வட தமிழகத்தில் வலுவான கட்சியான பாமகவை தனது ராஜதந்திர வியூக வலையில் சிக்க வைத்திருக்கிறது பாஜக. தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் பாஜகவை இது உற்சாகப்படுத்தி இருக்கிறது.

இன்னொன்று… பாமகவை தன்பக்கம் பாஜக இழுத்ததன் மூலம் அதிமுகவின் பலத்தை குறைக்கும் அதன் எண்ணமும் ஈடேறி விட்டது.

பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தால் வட தமிழகத்தில் அதிமுக வலிமை பெறுவதோடு ஒரு சில தொகுதிகளில் வெற்றியை ருசிக்க வாய்ப்பு இருந்திருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். ஒருவேளை வெற்றி கிடைக்காவிட்டாலும் வாக்கு வங்கி சதவீதத்தை சற்றே உயர்த்தி, அதிமுக என் பக்கம் தான் என எடப்பாடி பழனிசாமி கெத்து காட்டியிருக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். அவரது செல்வாக்கும் கட்சியில் உயர வாய்ப்பு உருவாகி இருக்கும்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. காலையில் அதிமுகவுடன் இருந்த பாமக, மாலையில் பாஜகவுடன் கைகோர்த்து விட்டது. இதன் மூலம் வாக்கு வங்கியைத் தக்க வைத்து தன்னை கட்சியில் நிலைநிறுத்திக் கொண்டாலே போதும் என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது.

அதேநேரத்தில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிகவும வலுவான இடத்தில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதிமுக தலைமையிலும் பாஜக தலைமையிலும் கூட்டணிகள் அமைந்திருக்கும் விதம் திமுக கூட்டணியின் மெகா வெற்றிக்கு மிக எளிதான வழியை அமைத்துக் கொடுத்திருப்பதாகவே கணிக்கப்படுகிறது.

வெற்றி மாலையை கட்ட தமிழ்நாட்டு வாக்காளர்கள் தயாராகி விட்டனர். யார், யார் எந்தக் கணக்கைப் போட்டுக் கூட்டிக் கழித்தாலும் சரியான கணக்கைப் போட்டு தீர்வைத் தரப்போவது வாக்காளர்களின் ஒற்றை விரல் தானே!

படிக்க வேண்டும்

spot_img