fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் தமிழ்நாடு கிராம வங்கியின் 677வது புதிய கிளையை திறந்து வைத்தார், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்

தூத்துக்குடியில் தமிழ்நாடு கிராம வங்கியின் 677வது புதிய கிளையை திறந்து வைத்தார், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்டம், தெய்வ செயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் 677வது புதிய கிளையினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் கூறியதாவது:
தமிழ்நாடு கிராம வங்கியின் 677வது கிளை நமது மாவட்டத்தின் தெய்வசெயல்புரம் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிராம வங்கியானது நமது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், குறிப்பாக கிராமப் பகுதிகளில் வங்கிச் சேவையை ஆற்றி வருகிறது. இரண்டாவது பெரிய வங்கியாக செயல்படுகிறது. இந்த வங்கியின் சேவையானது சிறு கிராமங்களிலும் சென்றடைவதற்காக பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக, மண்டல ஊரக வங்கி என்று குறிப்பிடக்கூடிய இந்த வங்கியின் நோக்கம், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், ஏழை எளியவர்களுக்கு வங்கி சேவை, வங்கி கடன் வசதி, நிதி சேவைகளை செய்து கொடுப்பதாகும். நமது மாநிலத்தில் இரண்டு வங்கிகளான பாண்டியன் கிராம வங்கி மற்றும் பல்லவன் கிராம வங்கி ஆகிய வங்கிகளை ஒன்றிணைத்து, தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது.

இவ்வங்கியின் தலைமையிடம் சேலம் ஆகும். மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 676 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது 677ஆவது வங்கிக்கிளை தெய்வ செயல்புரத்தில் தொடங்கப் பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் வங்கியின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
வங்கிகளுக்கிடையே அதிகமான கடன் வழங்குவதிலும், அதிகமாக வைப்பு தொகை வைப்பதிலும் சிறு போட்டி ஏற்படும். அதிகமான டெபாசிட் வாங்குபவர்களுக்கு போட்டி இருக்கும். அதே மாதிரி அதிகமான கடன் வழங்குவதிலும் போட்டி ஏற்படும். அதிகமாக கிளைகளைக் கொண்டிருக்கக் கூடிய வங்கி, அதிகமாக டெபாசிட் பெறுகின்றது. ஆனால் அதிகமாக கடன்களை நமது ஊருக்கு வழங்கவில்லை என்பது சென்ற ஆண்டறிக்கையில் தெரிய வந்தது.
நகைக் கடன் மற்றும் அது சார்ந்த கடன்கள், சிறிய கடன்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கக்கூடிய கடன் உள்ளிட்ட அனைத்து கடனுதவிகளிலும் எல்லாரும் பயன்பெற வேண்டும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறேன். அரசு துறையிலும், பணங்களை டெபாசிட் செய்வதற்கு கோரிக்கை வைக்கிறீர்கள். அதே அளவுக்கு நீங்களும் ஒவ்வொரு மக்களுக்கும் அதிகமான மற்றும் எளிமையான கடன்களை வழங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

சிறு கிராமங்களில் உள்ள புதிய பயனாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் வங்கி சேவையை வழங்கி உதவி செய்ய வேண்டும். இந்த ஆண்டிற்கான இலக்குகளை அடைவதற்காகவும் அதை நோக்கி செல்ல வேண்டும்.
இந்த வங்கி நல்லபடியாக செயல்படுவதற்கு, நீங்கள் எல்லாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வங்கி, கடனுள்ளவர்களுக்கு இருக்கக்கூடிய பணப் பரிமாற்றத்தை வைத்து சென்ட்ரலைஸ்டு சிஸ்டம் ஆப் சிபில் ஸ்கோர் என்று ஒரு மாதிரியான டிரைவ் வைத்து, எங்கெங்கெல்லாம் கடன் வாங்கியிருக்கோம், இந்தக் கடன்கள் எல்லாம் எவ்வாறு திருப்பிச் செலுத்துகின்றோம் என்பதற்கான நடைமுறைகளை எல்லாம் வங்கிகளுக்குள் பரிமாறிக் கொண்டிருக்கிறது.
எனவே, தேவையான அளவிற்கு கடன் வாங்கி, அதனை சரியாக உரிய நேரத்தில் திரும்ப செலுத்த வேண்டும். இந்த வங்கி வழங்கக்கூடிய சேவைகளை நல்லபடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த வங்கி உங்களுக்கு நல்ல சேவைகளை வழங்கும். இந்த வங்கி வளர்வது, வங்கியின் வளர்ச்சிக்கு ஒரு உதவியாக இருக்கும். எனவே நீங்கள் எல்லாரும் நல்ல ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த வங்கி சிறந்த வங்கியாக மென்மேலும் வளர்ச்சி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், தமிழ்நாடு கிராம வங்கியின் பொது மேலாளர்கள் கண்ணன் பொன்னுராமன், குமார், வட்டார மேலாளர் சுதர்சன், கிளை மேலாளர் சந்தானசெல்வம், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img