fbpx
Homeதலையங்கம்எதிர்க்கட்சிகளின் தேர்தல் பணிக்கு முட்டுக்கட்டை!

எதிர்க்கட்சிகளின் தேர்தல் பணிக்கு முட்டுக்கட்டை!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளை முடக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.200 கோடி வரி பாக்கி என்று கூறி காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கியது. தற்போது ரூ.1700 வரி பாக்கி இருப்பதாக காங்கிரஸுக்கு அமலாக்கத்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கையை, ‘வரி பயங்கரவாதம்‘ என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. வருமான வரித்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடுதழுவிய போராட்டத்தில் இறங்கி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பழைய பான் கார்டைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ததாகக் குற்றம்சாட்டி ரூ.11 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாஜக 42 கோடி ரூபாய் வரை விதிமீறல் செய்திருக்கிறது. அக்கட்சிக்கு வருமானவரித்துறை அபராதம் விதிக்கவில்லை. பாஜகவின் விதிமீறல் மட்டும் வருமான வரித்துறைக்குத் தெரிவதில்லை, என்ற குற்றச்சாட்டும் காங்கிரசால் முன்வைக்கப்படுகிறது.

இரு ஒருபுறம் இருக்க, தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கள் முடக்கம், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது, உலக அரங்கிலும் விவாதப்பொருளாக மாறிவிட்ட-து. அமெரிக்கா, ஜெர்மனி நாட்டு அரசுகள் விமர்சித்து இருக்கின்றன.

இந்தியாவில் தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் என்று ஐ.நா. சபை நம்பிக்கை தெரிவிக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஆணி வேர். அப்படியிருக்க தேர்தல் அறிவித்து பிரசாரம் தீவிரமாக நடக்கும் வேளையில் எதிர்க்கட்சிகளை முடக்கும்…குறிப்பாக நிதி ஆதாரங்களை முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் ஏதேச்சதிகாரப் போக்கிற்கு வித்தூன்றி விடக்கூடாது என்பதே நாட்டு மக்களின் கவலையாக மாறி இருக்கிறது.

முதலமைச்சர்களை கைது செய்வதைச் சட்டப்படி நியாயப்படுத்தினாலும் அவர்கள் தலைமையில் இயங்கும் கட்சிகளின் தேர்தல் பணி முடங்குமல்லவா-? பிறகு எப்படி எதிர்க்கட்சிகள் தங்கள் பலத்தை முழுமையாக காட்ட முடியும்? ஜனநாயகம் எப்படி தழைக்கும்?

எத்தனையோ தேர்தல் நடத்தை விதிகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் தேர்தல் நேரத்தில் தேவையா? என்பதே நாட்டு மக்களின் விவாதப்பொருளாக இப்போது மாறி இருக்கிறது.

அரசியல் கட்சிகளின் மீதான ஐடி, அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை தேர்தல் முடியும்வரை தள்ளிப்போட்டால் என்ன குறைந்து விடப்போகிறது? தேர்தல் நேரத்தில் கட்சிகள் மீதான வருமானவரி, அமலாக்கத்துறை, சிபிஐ நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கும் நடத்தை விதி தேவைப்படுகிறது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் நிதி ஆதாரங்களுக்கு முட்டுக்கட்டை போடும் இதுபோன்ற நடவடிக்கைகள் இனியாவது நிறுத்தப்பட வேண்டும். அது தான் தேர்தல் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும்!

படிக்க வேண்டும்

spot_img