இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21ம் தேதியன்று, காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதான வளாகத்திலுள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங் குள்ள நினைவு சின்னம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டது. மேலும் போலீ சாரின் உயிர் தியாகத்தை விளக்கும் வகையில் துப்பாக்கி, தலைக்கவசம் ஆகியவை நினைவு சின் னத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
மேலும் பணியின் போது இறந்த காவலர்களுக்கு திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ்குமார், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தனர்.
தொடர்ந்து நகர் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன், ஆயுதப்படை டிஎஸ்பி ஆனந்தராஜ், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா மற்றும் காவலர்கள் மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இறந்த காவலர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.