மாநில திட்டக்குழு மூலம் செயல்படுத்தப்படும் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்துக்கு ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
இதற்காக அறிக்கை தயாரிப்பது தொடர்பாக கோவை, கரூர், திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்ற பயிற்சியை ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில் 187 வளர்ச்சிக் குறியீடுகளின் அடிப்படையில் மாநிலத்தில் 50 பின்தங்கிய வட்டாரங்களைத் தேர்வு செய்து ‘வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம்’ எனும் புதிய திட்டம் மாநில திட்டக்குழு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தினை நன்கு செயல்படுத்துவதற்காக மாநில திட்டக்குழு மூலம் வட்டார வளர்ச்சி உத்தி அறிக்கை தயாரிப்பது தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் துறை அலுவலர்களும் இத்திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்து நம்பியூர் வட்டாரத்துக்கான வளர்ச்சி இலக்கினை அடையவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இப்பயிற்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, ஈரோடு மாவட்ட ஊராட்சி செயலர் என்.சாலமோன், மாநில திட்டக்குழு வளர்ச்சிப் பிரிவுத் தலைவர் எஸ்.செல்வகுமார், கூடுதல் முழுநேர உறுப்பினர் எம்.விஜயபாஸ்கர், உறுப்பினர் ஜே.அமலோர்பவநாதன் உள்ளிடோர் பங்கேற்றனர்.