Homeபிற செய்திகள்சீமைக் கருவேல மரங்களை அடியோடு அழிப்போம்!

சீமைக் கருவேல மரங்களை அடியோடு அழிப்போம்!

மத்திய, தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஐரோப்பியர்களால், 200 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பயனுள்ள, வறட்சியைத் தாங்கக்கூடிய மரம் என்ற அடிப்படையில் ஆசியா, ஆஸ்திரேலியா உள்பட உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்ட தாவரம், சீமைக்கருவேல மரம்.

வேளாண் பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்று நம்பப்பட்டு, கடந்த 1950-60களில் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து விதைகளாக கொண்டுவரப்பட்டு தூவப்பட்டவை தான் இன்று தீராத தலைவலியாக மாறியிருக்கும் சீமைக் கருவேல மரங்கள்.

தமிழ்நாட்டில் இந்த மரங்களை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தொலைதூர சாலை வழிப் பயணங்களின் போது அதிகமாக கண்ணில் படக் கூடியவை இம்மரங்கள் தான். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவை தமிழ்நாடு முழுவதும் கிளை பரப்பி ஏறத்தாழ 25 சதவித விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியதாகும். மழை பெய்யவில்லை என்றாலும், நிலத்தில் நீரே இல்லை என்றாலும் கூட இவை வளரும் தன்மையுடையவை. ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் பரப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது.

இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது. இம்மரத்தின் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

திரும்பிய பக்கமெல்லாம் காட்சியளிக்கும் இந்தத் தாவரத்தை ஒழிப்பதற்கான இயக்கம், 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் இப்பணியை 10 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக முடிக்க முடியவில்லை.

சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறிவிட்ட சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர். உயர்நீதிமன்ற நீதிபதிகளும் அவ்வப்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை கண்டிப்புடன் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் வனத்தை பாழ்படுத்தும் 800 டன் சீமைக் கருவேல மரங்களை வனத்துறையினர் அகற்றியுள்ளனர். அண்மைக் காலமாக, இப்பகுதியில் சீமைக் கருவேல மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் அவற்றை அகற்ற வனத்துறையினர் முடிவு செய்தனர். இதுவரை 800 டன் மரங்கள் வேரோடு அகற்றப்பட்ட நிலையில், இந்தப் பணி நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமைக் கருவேல மரங்களை அடியோடு அழிக்க, அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறையினரும் தன்னார்வலர்களும் தங்கள் செயல்பாட்டை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசும் முழுவீச்சில் களமிறங்கி இப்பணியை மேற்கொண்டால் மட்டுமே இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும்!

படிக்க வேண்டும்

spot_img