இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் – தேசிய வேளாண் பூச்சி வளப் பணியகம், பெங்களூரு மற்றும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் (வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம், இந்திய அரசு) செயல்விளக்கம் மற்றும் விதை உற்பத்தி பண்ணை – தளி இணைந்து தென்னை, கத்தரி, மா மற்றும் நெல் ஆகியவற்றில் உயிர் பூச்சிக்கொல்லி பயன்பாட்டிற்கான வேளாண் ட்ரோன் (ஆளில்லா விமானம்) பற்றிய செயல்விளக்கத்தை திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவில் உள்ள தளி, மொடக்குப்பட்டி, எலையமுத்தூர் மற்றும் வாளவாடி ஆகிய கிராமங்களில் நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு தென்னை மகத்துவ மையமத்தின் உதவி இயக்குநர் கு.ரகோத்துமன் தலைமை வகித்தார். மேலும், விவசாயத்தில் ஆளில்லா விமானத்தின் பயன்பாடு, பயிர் கண்காணிப்பு, பூச்சி கண்டறிதல் மற்றும் பெரிய அளவிலான கணக்கெடுப்பு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினார்.
முனைவர் கே.செல்வராஜ் (மூத்த விஞ்ஞானி – பூச்சியியல்) விவசாயத்தில் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும்போது வெவ்வேறு பயிர்களுக்கான நிலையான இயக்க நடைமுறைகள், மருந்தளவு, தெளிப்பு அளவு தேவைகள் போன்றவற்றைப் பற்றி விரிவாகக் எடுத்து கூறினார்.
மேலும் அவர், தென்னை, கத்தரி, மா மற்றும் நெல் பயிர்களில் உயிர் பூச்சிக்கொல்லி தெளிப்பதில் ட்ரோனின் பயன்பாட்டைக செயல் விளக்கம் செய்து காட்டினார். கொள்முதல் மற்றும் உரிம நடைமுறைகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனிப்பயன் பணியமர்த்தல் மையம் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு ட்ரோன் கொள்முதல் செய்வதற்கான அரசாங்க நிதி உதவி குறித்தும் விளக்கினார்.
டெல்லியில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு என்ற திட்டத்தின் நிதி ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 150 விவசாயிகள், தொழில் முனைவோர், பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.