கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்முனைவோர் ஆற்றலை உருவாக்கிடும் வகையில் நிறைந்தது மனம் திட்டத்தில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள், வழிகாட்டி ஆசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் யூனிசெப் நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அரசு மற்றம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இடையே புதுமை மற்றும் தொழில் முனைவோர் ஆற்றலை வளர்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்திடும் வகையில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இக்கருத்தரங்கில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களின் படைப்புத் திறனை சோதித்து அதில் சிறந்த படைப்பாளர்களை கண்டறிந்து, மாணவர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது. மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு 2 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் கண்டுபிடிப்பிற்கு ஆகும் செலவிற்காக அதிகபட்சமாக ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 04.02.2025 அன்று பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12 குழுக்கள் பங்கேற்புடன் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த 4 குழுக்கள் 30.04.2025 அன்று சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் வெற்றிபெற்றவர்கள் 16.07.2025 அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த கிள்ளை அரசு மேல்நிலைநிலைப் பள்ளி மாணவிகளான சுசீதா, ஓவியா, சங்கரி, சுவாதி மற்றும் லேகாஸ்ரீ ஆகியோர் ஆசிரியை கவிதாவின் வழிகாட்டுதளின்படி இயற்கை திண்ம எரிபொருள் என்ற கண்டுபிடிப்புக்காக இரண்டாம் பரிசு பெற்றமைக்கு ரூ.50,000 காசோலை, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
அரசின் வாயிலாக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமன்றி அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும். இவ்வாறு கடலூர் மாவட்ட ஆட்சி சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இது குறித்து நிறைந்தது மனம் திட்டத்தில் பயனடைந்த கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கூறியதாவது: நாங்கள் கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறோம். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் போட்டி குறித்து ஆசிரியர் எங்களுக்கு தெரிவித்தனர்.
எங்கள் பகுதியில் உள்ள கடற்கரையில் எளிதில் கிடைக்கக்கூடிய கடல் சிற்பிகள், முட்டை ஓடுகள், சாக்பீஸ் ஆகியவற்றை மூலப்பொருட்களாக கொண்டு குறைந்த செலவில் எங்களது டெய்சி குழு இயற்கை திண்ம எரிபொருள் கண்டுபிடிப்பினை ஆசிரியர் வழிகாட்டுதலுடன் உருவாக்கினோம்.
இக்கண்டுபிடிப்பு மற்ற எரிப்பொருட்களை காட்டிலும் எளிதாகவும், எளிமையாகவும் பற்றக்கூடிய வகையில் உள்ளது. எங்கள் குழுவின் கண்டுபிடிப்பு மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் வெற்றிபெற்று, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று பரிசு பெற்றுள்ளோம்.
எங்களைப் போன்ற பள்ளி மாணவிகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசுக்கு நன்றி. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



