கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகளை பாதுகாத்து வைக்கப்படவுள்ள அறையினையும், வாக்கு எண்ணும் மையத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கடலூர், தேவணாம்பட்டினம் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், நேற்று பார்¬ வயிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு பதிவு முடிந்தவுடன் கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகளை பாதுகாத்து வைக்கபடவுள்ள வைப்பறைகளின் உறுதித்தன்மையினையும் மற்றும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிப்பதற்கும், மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட ஆயத்தப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சரியான அளவில் வாக்கு எண்ணிக்கை முகவர்களை அனுமதிக்கவும், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணிக்கை பணி மேற்கொள்ள தடுப்புகள் அமைப்பது மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.