fbpx
Homeபிற செய்திகள்‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ - பசியாறும் 630 சிறார்கள்: படிப்பில் ஆர்வம் அதிகரிப்பு

‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ – பசியாறும் 630 சிறார்கள்: படிப்பில் ஆர்வம் அதிகரிப்பு

கடலூர் மாவட்டத்தில் ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்’ கீழ் முதற்கட்டமாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் படிக்கும் 630 குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல், தமிழக மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு துறைகளின் வாயிலாக எண்ணற்ற புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக இதில் தமிழ்நாடு கல்வித்துறையில் சிறந்து விளங்கிடும் வகையில் இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டம், விலையில்லா மிதிவண்டி, நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் நலன் கருதி அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நகரப்பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் காலையிலேயே புறப்பட்டு வருவதால், சிலரது குடும்ப சூழ்நிலை காரணமாக பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை.

இந்நிலைபாட்டினை அறிந்து முதல்வர் மாணவர்களின் ஆரோக்கியம் மேம்படும் வகையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கிட, சட்டமன்ற பேரவையில் 07.05.2022 அன்று விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர் நிகழ்வாக கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் படிக்கும் 630 குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் மைய சமையல் கூடத்தில் காலை 7.30 மணிக்குள் சமைக்கப்பட்டு மாநகராட்சியில் உள்ள 15 தொடக்கப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் வசம் ஒப்படைக்கப்பட்டு நாள்தோறும் சூடான மற்றும் சுவையான காலை உணவு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அரசு வழிகாட்டுதலின்படி 1 குழந்தைக்கு 150 முதல் 200 கிராம் வரை உணவு மற்றும் 60 மி.கி. காய்கறியுடன் கூடிய சாம்பார், ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

“மனநிறைவு கிடைத்தது”

இத்திட்டத்தில் பயனடைந்த மாணவர் தருண் என்பவரின் பெற்றோர் தெரிவித்ததாவது:எனது மகன் வண்டிப்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். பொம்மை தயாரிக்கும் இடத்தில் வேலை செய்து வருகிறேன் என்னுடைய மனைவி மாற்றுத்திறனாளி.

எனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக காலை நேரத்தில் என் மகனுக்கு சரியான முறையில் உணவு கொடுக்க முடியாமல் இருந்தோம், தற்போது முதல்வர் அறிவித்த காலை உணவு திட்டத்தினால் மகன் பள்ளிக்கு சென்றவுடன் தினந்தோறும் காலையில் சூடாகவும், சுவையாகவும் உணவு சாப்பிடுவது எங்களுக்கு மனநிறைவாக உள்ளது.

இதனால் என் மகன் கல்வி கற்பதில் ஆர்வமாகவும், பள்ளிக்கு தாமதமின்றி சென்று படிக்கவும் தொடங்கியுள்ளான். இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்வருக்கு குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொகுப்பு:
கே.சுப்பையா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ஜெ.பாலமுருகன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்,(செய்தி)
கடலூர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img