கோவை பீளமேடு அடுத்த டைடல் பார்க் எல்காட் பகுதியில், இன்று 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
பசுமை தமிழ்நாடு கொள்கைக்காக கோவை பீளமேடு அடுத்த டைடல் பார்க் எல்காட் வளாகத்தில் இன்று 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டத் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல்ஆணையர் வி.பாலகிருஷ்ணன், ஹெச்டிஎப்சி வங்கியின் தமிழ்நாடு மாநில தலைவர் கேசவன் ரங்காச்சாரி, மற்றும் டைடல் பார்க் எல்காட், நிர்வாக அதிகாரி, தனலட்சுமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து இந்த நிகழ்வை துவக்கி வைத்தனர்,
முன்னதாக பசுமையை காப்போம் எனும் கையெழுத்து இயக்கத்தை கையெழுத்து இட்டு துவக்கி வைத்த ஆணையர் பாலகிருஷ்ணன், “நகர வாழ்க்கையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் நாம் மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதனை பராமரிப்பு செய்ய வேண்டும், நாம் அனைவருமே நகரில் ஒரு மரக்கன்றுகளை தினமும் பராமரிப்பு செய்தாலே நகருக்குள் பசுமை தழைத்தோங்கும்“ என்றார்.
இதனை தொடர்த்து 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்.