காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிபாளையம் செந்தூர் நகர், ஒன்னிபாளையம் ராம்நகர் உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இரு போலி மதுபான ஆலைகள் கண்டறியப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அனில் குமார்(48) கேரள மாநில போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், எரிசாராயம் மற்றும் போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன் நேற்று போலி மதுபான ஆலைகள் செயல்பட்டு வந்த இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், காரமடை காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர் “ கோவை மாவட்டத்தில் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காரமடை அருகே போலி மதுபான ஆலைகள் செயல்பட்டு தொடர் பாக நேற்று ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான அனில்குமார் கேரள மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார்.
அவரை கோவை மாவட்ட போலீசார் கஸ்டடியில் எடுப்பதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் இவ் வழக்கில் யார்,யாருக்கு தொடர்பு உள்ளது? போலி மதுபானங்களை எங்கெங்கு விற்பனை செய்தனர்? என்பது குறித்த முழு விபரம் தெரியவரும்.
இவ்வழக்கை விசாரிக்கும் வகையில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி, கோவை மதுவிலக்கு டிஎஸ்பி ஜனனி பிரியா உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்கும் பணியில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் “ என்றார்.