கோவை பாராளுமன்ற தொகுதி திமுக சட்ட உதவி மையத்தை திமுக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் என்ஆர்.இளங்கோ – மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக சார்பில் தேர்தல் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி, இன்று கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக சட்ட உதவி மையம் (வார் ரூம்) கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட உதவி அலுவலகத்தை திமுக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் என்ஆர்.இளங்கோ, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) ஆகியோர் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலின்போது எவ்வாறு செயல்பட வேண்டும், பிரச்சாரத்தின்போது ஏற்படும் சிக்கல்கள், பிரச்சினைகளை எவ்வாறு அணுக வேண்டும், அதற்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பது குறித்து திமுக வழக்கறிஞர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் என்ஆர்.இளங்கோ எடுத்து கூறினார்.
இந்த நிகழ்வுகளில், மாநில இணைச்செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் கேஎம் தண்டபாணி, அருள்மொழி, வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் அன்புசெழியன், தலைவர் மருதுபாண்டி, அரசு வழக்கறிகள் அருள்குமார், ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் எம்எம்பி.முருகன், வழக்கறிஞர் சரவணன் மற்றும் திமுக வழக்கறிகள் கலந்துகொண்டனர்.