கழிவு பஞ்சு விலை ஒரு கிலோ ரூ.150-ஆக உயர்ந்துள்ளதால், தமிழகத் திலுள்ள 600 ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி (ஓஇ) பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கழிவு பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட்(ஓஇ) மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 600 ஓஇ மில்கள் செயல்படுகின்றன.
தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது:
கடந்த ஒரு மாதத்துக்கு மேல் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.70 ஆயிரம் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் ஸ்பின்னிங் நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சின் விலை ஒரு கிலோ ரூ.125-ல் இருந்து படிப்படியாக அதிகரித்து தற்போது ரூ 150 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்பின்னிங் நூற்பாலைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதை நாங்கள் நன்கு அறிவோம். இருப்பினும் விலை உயர்வால் ஜவுளி சங்கிலித் தொடரிலுள்ள ஓபன் எண்ட் மில்கள், விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலை நீடித்தால் எதிர்வரும் காலங்களில் ஓஇ மில்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும். ஏற்கெனவே ரூபாய் நோட்டு பயன்பாடுக்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி திட்டங்களை அரசு அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கழிவு பஞ்சு நுகர்வு குறையலாம்.
ஆனால் எப்போதும் நுகர்வு செய்யும் தன்மை கொண்ட ஓஇ மில்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கழிவு பஞ்சு விலையை குறைக்க ஸ்பின்னிங் நூற்பாலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விலை குறையுமா?
மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: ஆயத்த ஆடைகளுக்கு மட்டும் ஸ்பின்னிங் நூற்பாலைகள் நூலை வழங்குவது இல்லை. விசைத்தறிகளில் பயன்படுத்தப்படும் வார்ப்பு நூலையும் உற்பத்தி செய்து வழங்குகின்றனர்.
கழிவு பஞ்சு விலையை ஒரு கிலோவுக்கு ரூ. 30 குறைத்தால் வார்ப்பு நூலின் தேவை அதிகரிக்கும். தவிர ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலின் விலையும் குறையும்.
இதனால் கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழலில் இருந்து ஓரளவு மீள வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.