வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள், உழவர், உற்பத்தியாளர், நிறுவனங்கள், வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வங்கியில் 4 சதவட்டியில் வங்கிகடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜன.6), வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிகர்கள் மற்றும் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தார்.
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் இயக்குநர் நடராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:
உழவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை இடை தரகர்களின்றி நேரடியாக விற்பனை செய்யவும், நுகர்வோர்கள் தினந்தோறும் புத்தம் புதிய காய்கறிகளை வாங்கிடவும், ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
உழவர் சந்தைகள் மூலம் கோவை மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டமான நீலகிரி மாவட்ட விவசாயிகளும், தங்கள் மலைக் காய்கறிகளை விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் அனைத்து உழவர் சந்தைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. விவசாயி கள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்களை இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நேரடியாக விற்பனை செய்யவும் முடிகிறது.
வேளாண் உட்கட்டமைப்பு நிதி
வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள், உழவர், உற்பத்தியாளர், நிறுவனங்கள், வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்கு தேவையான கட்டுமான வசதிகளை ஏற்படுத்திகொள்ளவும், இதற்கு வங்கியில் 4 சதவட்டியில் வங்கிகடன் பெறவும் ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தொகைக்கு 3 சதவிகிதம் வட்டியில் விலக்கு அளிக்கப்படுவதால் நிகர வட்டி விகிதம் 1 சதவிகிதமாகவும் உள்ளது.
இத்திட்டத்தினை விவசாயிகள் அனைவரும் பெற்றுக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத் திட வேண்டும். மாநிலம் முழுவதிலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைத்திடும் நோக்கில் விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தோற்றுவித்து செயல்படுத்திட பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தி வருகின்றன.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் விளைபொருட்களை கொள்முதல் செய்து விற்பனை மற்றும் விதை உரங்கள் பயிர் பாதுகாப்பு மருந்துகள் வணிகம் செய்வது மூலமாக லாபம் ஈட்டவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது பங்குதாரர்களுக்கு விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து வழங்கவும் விளைவிக்கப்பட்ட பொருட்களை மதிப்பு கூட்டவும், மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் தேவையான நிதி அரசிடமிருந்து பெறவும் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசின் இதுபோன்ற முன்னோடித்திட்டங்களை விவசாயிகள், வேளாண் மதிப்புகூட்டு பொருள் தாயாரித்து விற்பனை செய்வோர் பயனடையும் வகையில் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் பேசினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சபி அகமது மற்றும் வணிகர்கள், வேளாண் விற்பனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.