fbpx
Homeபிற செய்திகள்வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் -ஆட்சியர் அறிவுரை

வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் -ஆட்சியர் அறிவுரை

விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பணி அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பழனி மேலும் பேசியதாவது:
விழுப்புரம் மக்களவைத் தொகுதியிலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதே வளாகத்தில் ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

அன்று காலை 6 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்குச்சீட்டுகள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படும். முதலில் அஞ்சல் வாக்குகளும், அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.

ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 14 மேஜைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் சார்பில், ஒரு மேஜைக்கு ஒரு முகவர், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு தலைமை முகவர் நியமனம் செய்யப்பட வேண்டும். இதற்குரிய விண்ணப்பத்தை அளித்து, அதற்குரிய ஆளறிச் சான்றிதழை மே 23ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். அஞ்சல் வாக்குச்சீட்டுகள் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் தனி அறையில் நடைபெறும்.

வேட்பாளர்கள் சார்பில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு முகவரை நியமித்துக் கொள்ளலாம். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள், முகவர்கள் கைப் பேசியை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேஜைகளில் மட்டுமே இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து, வேறு இடத்துக்குச் செல்லக் கூடாது. வாக்கு எண்ணிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முகவர்கள் செயல்படக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி தீபக் சிவாச், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷி நிகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img