மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதியில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை வனப்பகுதிகள் அமைந்துள்ளன.இங்கு காட்டுயானை, மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் வனப்பகுதிகளில் இருந்து தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களில் பயிர் களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. தொடர்ந்து விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளில் இருந்து பயிர்களை காக்கும் பொருட்டு விவசாயிகள் மின் வேலி அமைத்து வருகின்றனர்.
வன எல்லையை ஒட்டியுள்ள விளைநிலங்களிலேயே அதிக அளவிலான பயிர் சேதம் ஏற்படுகிறது. மேலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக மனித வன உயிரின மோதலும் ஏற்படுகிறது.
வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க விவசாயிகள் மின் வேலிகளை அமைத்து வருகின்றனர். வனவிலங்குளால் அதிகளவில் பாதிக்கப்படும் ஒரு சில விவசாயிகள் சில சமயங்களில் இந்த மின்வேலிகளில் சோலாருக்கு பதிலாக நேரடி மின்சாரத்தை மின் வேலியில் பாய்ச்சி வருகின்றனர்.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த நேரடி மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன. மின்வேலியில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினர், மின்சார வாரியத்தினருடன் இணைந்து அவ்வப்போது சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
மேலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குச்சென்று விவசாயிகளிடம் மின்வேலியில் நேரடி மின்சாரத்தை பயன்படுத் தக்கூடாது. சோலார் பவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீறினால் வன உயிரின பாது காப்புச்சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில் வனவிலங்குகள் அவ்வப்போது வன எல்லையை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருவதால் விவசாயிகள் சோலார் மின்வேலி அமைத்து தங்களது பயிர்களை காத்து வருகின்றனர். கடந்த ஆண்டு மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவத்திற்கு பின்னர் வனத்துறை யினரின் ரோந்துப்பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் வனத்துறையினர் குழுக்களாக பிரிக்கப்பட்டு வன எல்லையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இரவு, பகல் பாராமல் ஏதாவது ஒரு நேரத்தில் திடீரென விவசாய நிலங்களில் மின்வாரியத்தினருடன் இணைந்து சென்று வோல்ட் மீட்டர் மூலமாக மின்சாரத்தை சோதனை செய்யப்பட்டு வருகிறது.
சோலார் மின்வேலியை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். அதில் நேரடி மின் சாரத்தை பயன்படுத்தக்கூ டாது. வனவிலங்குகள் விலை நிலங்களுக்குள் நுழைந்தால் வனத்து றையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மீறி விவசாயிகளே விரட்ட முயற்சிக்கக்கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் சோலார் மின்வேலியை பயன்படுத்தி வருகின்றனர்.
வனத்துறையினர் மின்வாரியத் தினருடன் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விதி மீறினால் வன உயிரின பாதுகாப்புச்சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.