fbpx
Homeபிற செய்திகள்யோகா, தியானம் மூலம் தவறுசெய்யாத மனிதர்களாக மாறலாம்: போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு

யோகா, தியானம் மூலம் தவறுசெய்யாத மனிதர்களாக மாறலாம்: போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு

யோகா, தியானம் மூலம் மனவளம் பெற்றால் தவறு செய்யாத மனிதர்களாக மாறலாம் என்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் கூறினார்.
கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் உடல்நலனையும் மன நலனையும் மேம்படுத்தும் நோக்கில் காவலர்களுக்கு 6 நாட்கள் யோகா பயிற்சி அளிக்க மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தி இருந்தார்.

அதன் பேரில், மாநகர காவல்துறை, மாவட்ட காவல்துறை, யங் இந்தியா அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் யோகா பயிற்சி மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நேற்று (2ம் தேதி) தொடங்கியது. வரும் 7ம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் 320க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.

பயிற்சிக்குப் பின் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

மூன்று விதமான மனிதர்கள் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றனர். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதைப்பற்றி யோசிக்காமல் வாழ்க்கையின் போக்கில் வாழ்பவர்கள் முதல் வகை. ஒரு செயலைச் செய்து விட்டு அது நன்மையா, தீமையா? என பின்னர் வருந்துபவர்கள் இரண்டாம் வகை.

யோகா மற்றும் தியான பயிற்சி மூலம் மனவளம் பெற்று தன்னை உணர்ந்து எது சரி, எது தவறு? என்று தெளிவாக செயல்படுபவர்கள் மூன்றாம் வகை. இந்த மூன்றாம் வகை மனிதர்கள் 99 சதவீதம் தவறு செய்ய மாட்டார்கள்.

நம் மனதில் தோன்றும் எண்ணத்தை அதன் போக்கில் விட்டுவிட்டு அதனை இடையூறு செய்யாமல் கூர்ந்து கவனிப்பதும் அதே சமயம் நமது மூச்சுக் காற்றினையும் கூர்ந்து கவனிப்பதுமே தியானம் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த யோகா பயிற்சியில் கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் கே.சண்முகம், மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் ஏ.சேகர், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கே.ராஜபாண்டியன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் எம்.பிரதாப் சிங், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேந்திரன், யங் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் டாக்டர் ப்ரியா வாசுதேவன், அருண் மற்றும் இருபால் காவல் ஆளிநர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img