கோவை ஒத்தக்கால் மண்டபம் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் ஹர்ஷித் பாபு, சர்வதேச அரசு முறை ராணுவ சுற்றுப்பயணத்திற்கு தேர்வு பெற்றார்.
அதனைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல்படை (வராகா) கப்பலில் கடந்த ஜனவரி 28 முதல் மார்ச் 6, 2024 வரை (நாற்பது நாட்கள்) கடல்வழி ராணுவ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இக்கப்பலானது கொச்சின் துறைமுகத்தில் இருந்து மாணவர் ஹர்ஷித் பாபு மற்றும் ஐந்து நபர்கள் அடங்கிய என்சிசி மாணவர்கள், இந்திய கடலோர காவல்படை கமாண்டெண்ட் மற்றும் அதிகாரிகளுடன் ஆப்ரிக்க நாடுகளான கென்யா, தான்சானியா மற்றும் மொசாம்பியா நாடுகளுக்கு புறப்பட்டது.
இந்த பயணத்தில் ராணுவ பயிற்சிகள், கலந்துரையாடல், யோகா, கலாச்சார நிகழ்ச்சிகள் வெளிநாட்டு ராணுவ பாதுகாப்பு முறைகள் உள்ளிட்ட சர்வதேச நிகழ் வுகளில் பங்குபெற்றனர். இறுதியாக அவர்களுக்கு கடலோர காவல்படையின் சார்பாக பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சர்வதேச சுற்றுப்பயணத்தில் பங்கு பெற்று நாடு திரும்பிய மாணவர் ஹர்ஷித் பாபுவின் திறமையை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் முனைவர் பிரியா சதீஸ் பிரபு ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.ஜெயா, முதன்மை செயல் அதிகாரி முனைவர் கே.கருணாகரன், என்சிசி அலுவலர்கள் பிளையிங் ஆபிஸர் ஜெய்னுலாபிதீன், லெப்டினன்ட் ரவிக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.