மனிதாபிமான சேவையில் ஒன்பது தசாப்தங்களை நிறைவு செய்த இந்திய செஞ்சிலுவை சங்கம், கோவை மாவட்டக் கிளை, தனது 90வது ஆண்டு விழாவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடியது.

1935 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த அமைப்பு, கடந்த ஒன்பது தசாப்தங்களாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. காது கேளாதோர் மற்றும் பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி, மாவட்ட பேரிடர் மீட்பு குழு (DDRT), மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற பல சேவைகளை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது.

இளைஞர் மற்றும் ஜூனியர் செஞ்சிலுவை சங்கங்கள் வழியாக மாணவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் கவுண்டம்பாளையத்தில் ரெட் கிராஸ் இரத்த மையம் விரைவில் முழு அளவில் செயல்பட உள்ளது.
விழாவில் இந்திய செஞ்சிலுவை சங்கம் கோவை கிளை தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி தலைமை தாங்கினார். இடிகரை ஆதித்யா சர்வதேச பள்ளி நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ விஜய் குணசேகரன் தலைமை விருந்தினராகவும், ரோட்டரி மாவட்ட ஆளுநர் செல்லா கே.ராகவேந்திரன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

90வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள், கல்லூரிகள், ரோட்டரி மற்றும் ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

தன்னார்வ சேவையில் சிறந்து விளங்கியவர்களுக்கு நீண்டகால சேவை விருதுகள் மற்றும் கொரோனா கால பங்களிப்புக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்திய செஞ்சிலுவை சங்கம் நிர்வாகக் குழு உறுப்பினர் மோகன் சங்கர் நன்றியுரை வழங்கினார்.



