மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்புகளை மீட்டெடுத்து புனர்வாழ்வு அளிக்கும் முயற்சிக்கு காக்னிசண்ட் நிறுவனம் ரூ.3 கோடியை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியது.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அந்நிறுவனத்தின் இந்தியாவின் தலைவர் ராஜேஷ் நம்பியார் நேரில் சந்தித்து, இதற்கான காசோலையை வழங்கினார். தொழில்முறை சேவைகளை வழங்குவதில் உலகின் மிகப்பெரிய முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் நிறுவனம் திகழ்கிறது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது உலக அளவில் காக்னிசண்ட் பெரும் வளர்ச்சியடைய தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது.
மிக்ஜாம் புயல், பெரு மழையால் சென்னை மற்றும் தென் தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையில் காக்னிசண்ட் அவுட்ரீச் மூலம் பல்வேறு சமூக பணிகளை நிறைவேற்ற ஆதரவு வழங்கி வருவதாக நிறுவனத்தின் இந்தியாவின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் நம்பியார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘’வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர, அத்தியாவசிய உதவிக்காக இந்த நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கும், மாநில மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து உதவ காக்னிசண்ட் உறுதி பூண்டுள்ளது’’ என்றார்.