fbpx
Homeதலையங்கம்முதல்வர் பதவிக்காக நிறம் மாறும் பச்சோந்தி!

முதல்வர் பதவிக்காக நிறம் மாறும் பச்சோந்தி!

பீகாரில் கடந்த 2020 சட்டமன்ற தேர்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து நிதிஷ் குமார் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் பாஜக 78 தொகுதிகளிலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 தொகுதிகளையும் வென்றது. பாஜகவை விட குறைந்த இடங்களில் வென்றாலும் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி கிடைத்தது.

எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இதன்படி முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பொறுப்பேற்றனர்.

இந்தக் கூட்டணி ஆட்சி கடந்த 2 ஆண்டுகளாக பீகாரில் நடைபெற்று வரும் நிலையில், திடீர் திருப்பமாக தற்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்து விட்டார்.

வி.பி.சிங் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவ்வப்போது கூட்டணிகளை மாற்றினார்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கூட்டணி மாறுவது சகஜமானது. ஆனால் நிதிஷ் குமாரின் அரசியல் போக்கு சந்தர்ப்பவாதம் நிறைந்தது. 18 மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் முரண்பாடு கொண்டு, ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வர் ஆனார் நிதிஷ்.

பாஜகவையும், பாசிசத்தையும் வீழ்த்தப் போவதாக கூறி இந்தியா கூட்டணியை உருவாக்கியதால் நிதிஷ் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இடையே பீகாரில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. இன்று லாலு, தேஜஸ்வி யாதவுடன் முரண்பட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் நிதிஷ் குமார்.

இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த நிதிஷ் குமாரே அந்தக் கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறியது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

என்றாலும், நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறியது தாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி இருக்கிறார்.

நிதிஷ் குமாரின் இந்த கட்சி தாவல் குறித்து அவரை போல் இப்படி ஒரு சுயநலப்- பதவி பித்தரை நாடு பார்த்ததில்லை. இந்தியாவில் மட்டுமல்ல. ஆசியா கண்டத்திலேயே நிதிஷ் குமார் போன்ற சந்தர்ப்பவாத அரசியில்வாதி யாருமில்லை.

துரோகிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். 2017-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நிதிஷ் ஒரு பாம்பு போன்றவர். 2 வருடங்களுக்கு ஒருமுறை பாம்பு போல் புதிய தோலை அணிந்து கொள்வார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவை லாலுவின் மகள் ரோகினி ஆச்சார்யா தற்போது பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். குப்பை மீண்டும் குப்பை தொட்டிக்குள் செல்கிறது... துர்நாற்றம் வீசுகிறது என்ற ரோகினி ஆச்சார்யா தெரிவித்து இருக்கிறார். நிதிஷ்குமாரை ஒப்பிட இதை விட சிறந்த உவமை வேறு என்னவாக இருக்க முடியும்?

கொள்கையும் இல்லை, கோட்பாடும் இல்லை. முதல்வர் பதவி ஒன்றே கொள்கை – முதல்வர் பதவிக்காக 5 முறை அந்தர் பல்டி அடித்து துரோகத்தின் அடையாளமாகத் திகழ்கிறார், நிதிஷ்குமார். அவரை நாட்டில் பலரும் எப்படி விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

பச்சோந்தி… அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி!

படிக்க வேண்டும்

spot_img