fbpx
Homeதலையங்கம்கிறிஸ்துமஸ் பிரார்த்தனையால் அன்பும் அமைதியும் மலரட்டும்!

கிறிஸ்துமஸ் பிரார்த்தனையால் அன்பும் அமைதியும் மலரட்டும்!

இன்னும் ஒரு சில நாட்களில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. அதற்கு முன்னோட்டமாக இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

“புறாக்களை போல கபடமில்லாமல் இருங்கள்” என்கிற இயேசுவின் பொன்மொழியை பிரதிபலிக்கும் பொருட்டு, ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு இன்று அன்பை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். ஒருவருக்கொருவர், இனிப்பு, புத்தாடை, அன்பு மொழி பரிமாறிக்கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

நள்ளிரவு 12 மணியளவில் தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டில், வேளாங்கண்ணி, தூத்துக்குடி, சென்னை – சாந்தோம், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, கொடைக்கானல், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் குடில்களில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு திருப்பலி நடைபெற்றது.

ஏராளமான மக்கள் இதனை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
சர்வதேச அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

போர்கள் நடைபெறும் இந்த நேரத்தில் மக்கள் நல் வாழ்விற்காகவும் உலக அமைதிக்காகவும் தேவ மைந்தனிடம் மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
ஆனால் இஸ்ரேல் – காசா போர், உக்ரைன் -ரஷ்யா போர், உலக பொருளாதாரத்தில் மந்தநிலை, மீண்டும் கொரோனா தொற்று, சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல், ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள், சாதிய, மத, இன மோதல்கள் என இந்த ஓராண்டில் ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

போர் காரணமாக இயேசு பிறந்த பெத்லகேம் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. இது வேதனையான செய்தி.
இது போன்றவற்றில் இருந்து மீண்டு உலகில் அன்பும் அமைதியும் தவழ வேண்டும் என்பதே இன்றைய கிறிஸ்துமஸ் பிரார்த்தனையாக அமைந்துள்ளது.

மனமுருகி செய்யும் பிரார்த்தனைக்கு சக்தி உண்டு என்பதில் ஐயமில்லை. எண்ணங்கள் தானே செயலாக மாறுகிறது. பிரார்த்தனைகள் நற்பயனை அளிக்கும்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img