சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தனது செல்போனிலில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், ஜனவரி மாதம் அவர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் “தனிமையில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றமாகாது. அவற்றைப் பிறருக்கு பகிர்வதுதான் குற்றமாகும்” எனத் தீர்ப்பு வழங்கி, அந்த இளைஞரை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது மிகவும் கொடூரமான கருத்து எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சைத் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் குற்றங்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் சட்டம்தான் போக்ஸோ. ஆனால், போக்ஸோ வழக்குகள் அதிகரிப்பதற்கும், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் இதுபோன்ற ஆபாசப் படங்கள் முக்கிய காரணம். தனிமையில் குழந்தைகளின் ஆபாச வீடியோவைப் பார்க்கும் ஒரு நபர், பிற குழந்தைகளையும் அதே கண்ணோட்டத்தில்தான் பார்ப்பார். சமீபத்தில், புதுச்சேரியில் 9 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங்களுக்கு ஆபாசப் படங்களும் ஒரு காரணம்தான்.
எனவே, தனிமையில் குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பது குற்றமில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றம்சாட்டப்பட்ட நபரை வழக்கில் இருந்து விடுவித்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது.
ஆபாசப் படம் பார்ப்பது என்ற இந்தச் சிறிய தொடக்கம்தான், பாலியல் வன்முறை என்ற பெரிய குற்றங்களுக்கும் தொடக்கமாக அமைந்துவிடுகிறது. சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்கும் போக்ஸோ சட்டம், இந்த வழக்குகளை கொலைக் குற்றத்துக்குச் சமமாக பாவித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருகிறது. போதை வஸ்துகள் மற்றும் ஆபாசப் படங்கள்தான் பெரும்பாலான குற்றங்களுக்குத் தூண்டுகோலாக அமைகின்றன. இவற்றையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
குழந்தைகளின் ஆபாச படம் பார்ப்பதை தனி உரிமையாக ஒருபோதும் ஏற்க முடியாது, ஏற்கவும் கூடாது. சமூக நீதி கோட்பாட்டின்படி அது தவறானதாகும். இந்த விஷயம் தொடர்பான வழக்கை தற்போது உச்சநீதிமன்றம் கையில் எடுத்து இருக்கிறது.
கீழமை நீதிமன்றங்களுக்கும் ஒன்றிய – மாநில அரசுகளுக்கும் உரிய வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் நிச்சயம் வழங்கும். குழந்தைகளின் ஆபாச படம் பார்ப்பதை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டும்.
மைனர் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் பார்க்கவே முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டிய அவசியமும் அவசரமும் இப்போது ஏற்பட்டுள்ளது!